உடுமலை:குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 23 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்து, கூட்டு அலுவலர்கள் குழுவினர் உத்தரவிட்டனர்.தமிழக அரசு உத்தரவுபடி, ஆண்டுதோறும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிச்சான்று வழங்கப்படுகிறது.பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூட்டு அலுவலர்கள் குழு வாயிலாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.அவ்வகையில், உடுமலை நேதாஜி மைதானத்தில், கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில், டி.எஸ்.பி., சுகுமாறன், பள்ளி கல்வித்துறை அதிகாரி ஆனந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, கண்காணிப்பாளர்கள் அருணாசலம், தங்கராஜ், தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் குமார் உள்ளிட்ட குழுவினர், பள்ளி, கல்லுாரி வாகனங்களை ஆய்வு செய்தனர்.முதற்கட்டமாக, 29 பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட, 152 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.வாகனங்களில், தமிழக அரசு உத்தரவின்படி வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், அவசர கால வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும், ஆய்வு செய்யப்பட்டது.இதில், விதிகளை பின்பற்றி, வசதிகளை ஏற்படுத்தாத, குறைபாடுள்ள, 23 வாகனங்களின் தகுதிச்சான்றை தற்காலிகமாக ரத்து செய்து, கூட்டு அலுவலர்கள் குழுவினர் உத்தரவிட்டனர்.வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், அவசர கால மீட்பு பணி குறித்து ஓட்டுநர்களுக்கு, தீயணைப்பு துறை சார்பில், பயிற்சியளிக்கப்பட்டது.