திருப்பூர்;உலகளாவிய பின்னலாடை உற்பத்தி தொழில்நுட்ப இயந்திரங்களின் அணிவகுப்புடன், இன்று முதல் 3 நாள், திருப்பூரில் 'நிட்ேஷா' நடக்கிறது..திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள 'டாப் லைட்' வளாகத்தில், 22வது நிட்ஷோ கண்காட்சி இன்று துவங்குகிறது. காலையில் நடைபெறும் துவக்க விழாவுக்கு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமை வகிக்கிறார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரமாண்டமான அரங்குகளில், ஐரோப்பா, அமெரிக்கா, கொரியா, சீனா, தைவான், போர்ச்சுக்கல் என, உலகளாவிய நாடுகளின் 400 முன்னணி நிறுவன தயாரிப்பிலான ஆடை உற்பத்தி இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.புதுமை புகுத்தப்பட்ட நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் மெஷின், எலாஸ்டிக் உற்பத்தி, பேக்கிங் உள்பட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் நவீன மயமாக்கலுக்கு கைகொடுக்கும் அனைத்து இயந்திரங்களும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன. சாயங்கள், மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு தேவையான நுால் மற்றும் துணி ரகங்கள், ஆடை உற்பத்தி உதிரி பாகங்களும் பிரத்யேக அரங்குகளில் இடம்பெறுகின்றன.இன்று துவங்கும் கண்காட்சி, வரும், 11ம் தேதி வரை மூன்று நாள் நடைபெறுகிறது. திருப்பூர் உள்பட தமிழகம் மட்டுமின்றி, நாட ுமுழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'மேக் இன் இந்தியா'வுக்கு வலு சேர்க்கும்
கண்காட்சி ஏற்பாட்டாளர் கிருஷ்ணா கூறியதாவது:இந்திய ஜவுளித்துறையினரின் தொழில்நுட்ப தேடல்களை எளிதில் பூர்த்தி செய்யும் வகையிலேயே நிட்ஷோ கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. சர்வதேச அளவில் சமீபத்தில் அறிமுகமான அனைத்து மேம்பட்ட ஆடை உற்பத்தி இயந்திர தொழில்நுட்பங்களை இந்த கண்காட்சியில் பார்க்கமுடியும்.குறிப்பாக, சீனா, ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த நவீன பிரின்டிங் இயந்திரங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. வெளிநாட்டு மெஷின்கள் மட்டுமின்றி, 'மேக் இன் இந்தியா'வுக்கு வலுசேர்க்கும்வகையில், 10 ஸ்டால்கள் உள்ளன; இவற்றில், 6 ஸ்டால்களில், உலக தரத்துக்கு இணையாக உள்நாட்டில் தயாரான பிரின்டிங் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தக சந்தையில், நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. ஆடை உற்பத்தி துறையாளர்கள், செலவினங்களை கட்டுப்படுத்தி, உற்பத்தி பெருக்கத்துக்கு கைகொடுக்கும் இயந்திரங்களை கண்டறிந்து நிறுவி, தங்கள் நிறுவனங்களை எப்போதும் பலப்படுத்தி வைத்திருப்பது அவசியமாகிறது. வாய்ப்பை பயன்படுத்தி, பின்னலாடை உற்பத்தி துறையினர், தொழிலில் தடம்பதிக்க விரும்புவோர் அனைவரும் கண்காட்சியை தவறாமல் பார்வையிட வேண்டும். அதிநவீன இயந்திரங்களை கண்டறிந்து நிறுவி, தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும்.