| ADDED : ஆக 09, 2024 02:26 AM
திருப்பூர்;தேவராயம்பாளையத்தில் ரோட்டோர கிணறு, பஸ் ஸ்டாப் ஆகியவற்றைக் காணவில்லை என்ற புகாரின் பேரில் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தினர்.இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையம் கிராமத்தில், ரோட்டோரம் இருந்த கிணறு, பஸ் ஸ்டாப் நிழற்குடை ஆகியவற்றைக் காணவில்லை என பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதன் பேரில், வருவாய் மற்றும் நில அளவைப் பிரிவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, நீண்ட காலம் முன் பயன்பாட்டில் இருந்த ரோட்டோர கிணறு, பயன்பாடு குறைந்தும், ஆபத்தான நிலையிலும் இருந்ததால், 10 ஆண்டு முன்பே ஊராட்சி நிர்வாகத்தால் மூடப்பட்டது; இந்த கிணறு உள்ள இடத்தில், ரோட்டில் சேகரமாகும் மழை நீர் சென்று சேரும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, மழை நீர் சேகரிப்பு அமைப்பாகச் செயல்படுவது தெரிந்தது.பஸ் ஸ்டாப் நிழற்குடை, கடந்த 1990ம் ஆண்டில் இளைஞர் நற்பணி மன்றத்தால் நிறுவி பயன்பாட்டில் இருந்தது. பின்னர் ரோடு அகலப்படுத்தும் பணியின் போது, அகற்றப்பட்டது. அங்குள்ள இட உரிமையாளர் குமாரசாமி, தனக்குச் சொந்தமான இடத்தில் சிறிது இடம் வழங்கி, தனது சொந்த செலவில், பயணிகள் வசதிக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தார். தற்போது அவரது இடத்தில் கட்டுமானப்பணி நடப்பதால் அதை அகற்றியது தெரிந்தது. மேலும், கட்டுமானப் பணி முடிந்த பின் தனது சொந்த நிலத்தில் இடம் வழங்கி, பஸ் ஸ்டாப் அமைத்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.