திருப்பூர்;'நிட்ஜோன் டிரேடு எக்ஸ்போ' நிறுவனம் சார்பில், 'நிட்ஜோன் -2024' பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி, திருப்பூரில் நேற்று துவங்கியது.திருப்பூர், காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் கண்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கிய கண்காட்சியில், பின்னலாடை தொழில்நுட்பம், நுாலிழைகள், தையல் நுாலிழைகள், பின்னல் துணி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், கண்காட்சியை திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைவர் அப்புக்குட்டி, பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) தலைவர் ரத்தினசாமி, செயலாளர் ராஜாமணி, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம், திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டப்) தலைவர் மணி உள்ளிட்டோர், கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இயல்புநிலைக்கு வந்துள்ளது. இத்தகைய சாதகமான சூழலில், முதன்முறையாக இக்கண்காட்சி நடத்துவது, சிறப்பான பயனளிக்கும் என, தொழில் அமைப்பு நிர்வாகிகள் வரவேற்றனர்.கண்காட்சியில், நவீன பிரின்டிங் மெஷின், 'லேசர் கட்டிங்' மெஷின், சூயிங் மெஷின்கள், 'லேபிள்' ஒட்டும் மெஷின்கள், உதிரி பாகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்புக்கான அக்சசரீஸ் பொருட்கள், 'லேஸ்' வகைகள், பட்டன், ஜிப், நவீன 'இங்க்' வகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.கண்காட்சி, நாளை வரை நடைபெறும். தினமும் காலை, 10:30 முதல், இரவு 7:00 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம் என, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார், பரத், மோகன், ஸ்ரீதர், சிவசங்கர் ஆகியோர் தெரிவித்தனர்.