| ADDED : மே 24, 2024 12:20 AM
அவிநாசி;அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் குளத்தை சீரமைக்கும் பணியை பொதுமக்கள் மேற்கொண்டனர்.அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரன்பாளையத்தில் குளம் உள்ளது. சுற்றுப்பகுதியில் சேகரமாகும் மழை நீர் இந்த குளத்தில் தேங்கி நிற்கும். இதன் மூலம், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். இக்குளம் நிரம்பினால், அதில் வெளியேறும் தண்ணீர், கரையோரம் உள்ள கடைமடை வழியாக உள்ள வாய்க்கால் மூலம் தாளக் கரைக்குச் சென்று சேரும்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இக்குளம் நிரம்பியது. இன்னும் இரண்டடி அளவு நீர் வரும் போது, கடைமடை வாய்க்கால் வழியாக வெளியேறும். ஆனால், அதன் கட்டுமானம் சேதமடைந்தும், செடி கொடிகள் வளர்ந்தும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படும் நிலை காணப்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிலர், சேதமடைந்த கடைமடை கட்டுமானத்தை சரி செய்தும், செடி கொடிகளை அகற்றியும் சேவை செய்தனர். மக்கள் கூறுகையில், 'இது போன்ற பொது சேவை களுக்கு அரசு துறைகளை எதிர்பார்க்காமல் இயன்ற வரை நாமே களம் இறங்கிப் பணியாற்றலாம். இது போல் மற்றவர்களும் செயலாற்றலாம், அதற்கான விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் நாங்கள் இப்பணியை மேற்கொண்டாம்', என்றனர்.