அன்று எழுத்து - பேச்சு - உரிமைகளை இழந்தோம்நாளும் நாமும் புழுவாய் நெளிந்தோம்உழைப்பையெல்லாம் வரியாய்க் கொடுத்தோம்உயிர் இருந்தும் பிரேதம் போலானோம்இதற்கு எதிராகப் போராடிய சுயநலமற்ற தலைவர்களால்தான் சுதந்திரம் நம் தேசத்துக்குக் கிடைத்தது. கடந்த 15ம் தேதி, 78வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது குறித்து, இன்றைய இளம் தலைமுறையினர், பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?ஒழுக்கநெறி அவசியம்செந்தில்குமார், கருவம்பாளையம்: ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். தேசிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதையே சுதந்திரம் உணர்த்துகிறது. திருப்பூர் குமரனுடன் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொங்காளி முதலியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவன், என்பதில் எனக்கு பெருமை.பசுமை பேணுவோம்ஈஸ்வரமூர்த்தி, பல்லடம்: எண்ணற்றோரின் உயிர் தியாகத்தின் அறுவடையாக கிடைத்த சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. பசுமை திரட்சியை ஏற்படுத்த உறுதியேற்போம். நீர்நிலைகளை காத்து, மரம் வளர்த்து, மழை வளம் பெருக்குவோம். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, நோயில்லா சமுதாயம் படைப்போம்.பாகுபாடு மாறட்டும்தமிழரசி, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவி: நாடு சுதந்தரம் பெறுவதற்கு முன்பே பெண் விடுதலைக்காக தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர். ஆணுக்கு பெண் சரிசமம் என்ற நிலை தற்போது வந்திருக்கிறது; இது, சுதந்திரம் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதேநேரம், சில இடங்களில் பெண்களுக்கு எதிரான அநீதி, ஜாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பார்க்கப்படுகிறது; இவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.பேதம் வேண்டாம்ரஹ்மத், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவி:நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, உடன்கட்டை ஏறுதல், சதி உள்ள பெண்களுக்கு எதிரான செயல்கள் தவிர்க்கப்பட்டன. சுதந்திரம் பெற்ற பின், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு என, பல துறைகளில் சாதிக்கின்றனர். இவையெல்லாம் பல தலைவர்களின் தியாகத்தின் விளைவாக கிடைத்த சுதந்திரத்தின் பயன். இருப்பினும், சில இடங்களில் ஜாதி, மதம், இன பாகுபாடு பார்க்கப்படுவது, தவிர்க்கப்பட வேண்டும். - ரஹ்மத், எல்.ஆர்.ஜி., கல்லுாரிஒற்றுமை வளரட்டும்பாரதி, பல்லடம் அரசு கல்லுாரி மாணவி:தன்னம்பிக்கை மற்றும் தியாகத்தின் அடையாளம் தான் சுதந்திரம். பெற்ற சுதந்திரம், நம் நாட்டின் சமூக பண்பாடு, பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. நம் உரிமைகள், கடமைகளை சரியாக பின்பற்ற வேண்டும். சட்ட திட்டங்களை மதித்து, சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.திணிப்பு வேண்டாம்கதிரவன், பல்லடம் அரசு கல்லுாரிமாணவர்:மாணவர்: தேசம் காத்த தலைவர்களின் தியாகம், வீரம், ஒற்றுமையின் வலிமையை உலகிற்கே எடுத்துக்காட்டியது நம் சுதந்திரம். நம் உரிமை பறிக்கப்படும் போது, அதை மீட்டெடுக்க குரல் கொடுக்க வேண்டும். ஜாதி, மதம், வேற்றுமை மறந்து தேச வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். சுதந்திரம் என்பது, நாம் செய்ய விரும்புவதை அனுமதிப்பது மட்டுமல்ல; செய்ய விரும்பாததை நம் மீது திணிக்காமல் இருப்பதும் தான். சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த வீரர்களை போற்றுவோம்.தேசப்பற்று ஓங்கட்டும்ஸ்டீபன் சங்கர்தாஸ், பல்லடம் அரசு கல்லுாரி மாணவர்:நம் சிந்தனைகள் ஒன்றுபட்டு, நமக்குள் சமத்துவம் இருந்தால் எதுவாயினும் நம்மால் செய்ய இயலும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறது, சுதந்திரம். நமக்குள் இன, மொழி வேறுபாடுகள் களையப்பட வேண்டும். பல்வேறு இன்னல்கள், உயிர் தியாகங்களுக்கு இடையே பெற்ற சுதந்திரத்தின் மகத்துவம் காக்க, எதிர்கால சந்ததியினருக்கு தேசப்பற்றை வளர்க்க வேண்டும்.