திருப்பூர்:திருப்பூர், ஆண்டிபாளையம் படகு இல்லம் அடுத்த மாதம் முதல் செயல்பட உள்ளது. சாமளாபுரம் குளம், நஞ்சராயன்குளம் பகுதிகளையும் சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து சுற்றுலாத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தொழில்முனைவோர் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்துறையினர் பங்கேற்றனர்.மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தம் பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றன. நமது மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த, சுற்றுலா தொழில்முனைவோர் கைகொடுக்கவேண்டும்.ஆண்டிபாளையம் குளத்தில், படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு படகுகள் வந்திறங்கியுள்ளன. விரைவில் வெள்ளாட்டம் பார்க்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் முதல் வாரத்தில், படகு சவாரி துவங்கப்படும். துவக்க விழாவில், சுற்றுலா தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் பங்கேற்கவேண்டும். திருப்பூரின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக ஆண்டிபாளையம் குளம் படகு இல்லம் அமையும். துவக்க விழாவில், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்க உள்ளார்.ஓட்டல்களில் தங்குவோரிடம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்கள் குறித்து எடுத்துரைக்கவேண்டும். அடுத்ததாக சாமளாபுரம் குளம், நஞ்சராயன் குளம் பகுதிகளை மேம்படுத்தி, சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது. திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.----ஆண்டிபாளையம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம்.சாமளாபுரம் குளம்நஞ்சராயன் குளம்மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார்.
சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு வேலைவாய்ப்பு பெருக்க திட்டம்
''தமிழ்நாடு சுற்றுலா கொள்கை, கடந்த 2023ல் வெளியிடப்பட்டது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீத வருவாயை, சுற்றுலாத்துறை மூலம் ஈட்டவேண்டும் என்பது அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது.சுற்றுலாத்துறையின் சமூக வலைதள பக்கத்தில் ஐந்து லட்சம் பேரை இணைக்கவேண்டும்; சுற்றுலாத்துறையின் மொபைல் செயலியை ஐந்து லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த கொள்கை வெளிவரும்வரை, கிட்டத்தட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அளவு சுற்றுலாத்துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசு முனைப்புகாட்டிவருகிறது'' என்று மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் கூறினார்.