உடுமலை : கால்நடைத்துறை சார்பில், மாடுகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம், இன்று முதல் நடக்கிறது.கால்நடைகளுக்கு, இலம்பி தோல் நோய், வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை வகையைச் சார்ந்ததாகும். இந்நோய் பூச்சிக்கடி வாயிலாக பரவி, மாடுகளில் தோலின் மேல் கட்டிகள் தோன்றும். சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்துவிடும்.கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிப்பதன் வாயிலாக, இந்நோய் தாக்காமலும், மற்ற கால்நடைகளுக்குப் பரவாமலும் தடுக்கலாம்.இந்த நோய், கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகள் வாயிலாக பரவுகிறது. கோடைகால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது. பால் கறவையாளர்களாலும், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை கன்றுக்குட்டிகள் அருந்தும் போதும் நோய் தொற்று ஏற்படுகிறது. மேலும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாடு வாங்கி வருவதாலும் பரவுகிறது.இந்த வைரஸ் கிருமி, மாட்டின் தோல் மற்றும் காயங்களில், 18 முதல் 35 நாட்கள் வரை வாழும். அறிகுறிகள்
மாடுகளுக்கு கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல், காய்ச்சல், மாடுகள் சோர்வாக காணப்படுவது, உடல் முழுவதும் சிறு, சிறு கட்டிகளாக வீக்கம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகும். உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து சீல் வெளியேறும், நிணநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படும். தடுப்பு முறைகள்
சுத்தமான கொட்டகை, சுத்தமான பால் கறவை முறை ஆகியவை மட்டுமே இந்த நோய்த்தொற்றில் இருந்து, நம் கறவை மாடுகளைக் காப்பாற்றும். பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி, முடிந்த வரை தனி நபரால் பராமரிக்க வேண்டும்.மாடுகள் கட்டும் இடத்தையும், சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதித்த மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் தனியாக இருக்க வேண்டும். கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளைத் தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். இன்று முதல் முகாம்
இந்நோய் தடுக்கும் வகையில், இன்று, 5ம் தேதி முதல், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள, அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளை நிலையங்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்படுகிறது.இம்முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுவதால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.