திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கென பிரத்யேக பிரிவு விரிவுபடுத்தப்பட்டு, 80 படுக்கைகளுடன் செயல்படுகிறது.நாள் ஒன்றுக்கு, 30 முதல், 40 பெண்கள் பிரசவத்துக்கு அனுமதியாகின்றனர். ஒரே நாளில், 70க்கும் மேற்பட்டோர் அனுமதியானால் என்ன செய்வது என்பதற்காக, கூடுதல் படுக்கைகளுடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆறு அறுவை சிகிச்சை கூடங்கள், மூன்று 24 மணி நேர கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. எடை குறைவாக குழந்தை பிறந்தால், பச்சிளம் குழந்தையை தொடர் கண்காணிப்பில் வைக்க, சிறப்பு சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் வங்கி, ரத்தவங்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளே ஏற்படுத்தப்பட்டுள்ளது.கர்ப்பம் தரித்தவுடன் மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்கு உடற்பயிற்சி, மனம் திடமாக இருக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.திடீர் பிரசவ வலி ஏற்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்த வர, 108 ஆம்புலன்ஸ் உள்ளது. பிரசவம் முடிந்து தாயும், சேயும் வீட்டில் கொண்டு போய் விட, பிரத்யேக வாகன வசதியும் உள்ளது.தேவையான, ஒருங்கிணைந்த வசதிகள் ஒரே வளாகத்தில் கிடைக்க பெற்றுள்ள நிலையில், மகப்பேறு வளாகத்துக்கு மட்டும், 12 சிறப்பு டாக்டர், 29 மகப்பேறு பிரிவு டாக்டர், 120க்கும் மேற்பட்ட செவிலியர் கொண்ட குழு உள்ளது.இக்குழுவினர் மூலம் அரசு மருத்துவமனையில் நடக்கும் பிரசவங்களில், 10ல் ஏழு சுக பிரசவமாகிறது. தாயும், சேயும் நலம் உடன் வெளியே வருகின்றனர்.சுகப்பிரசவம் சாத்தியமா?கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட நாள் முதல் குழந்தைக்கு பிறப்பு முன் வரை டாக்டர்கள் கூறும் வழிமுறையை சரிவர கடைபிடிப்பவர்களுக்கு, சுகபிரசவம் சாத்தியம் தான். பெரும்பாலானோர் ஒரே மருத்துவமனையில் மருத்துவம் பார்க்காமல் மருத்துவமனை விட்டு மருத்துவமனை சென்று விடுகின்றனர். இது தவறு. இவ்வாறு செய்யக் கூடாது. முன்கூட்டியே தேர்வு செய்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.கர்ப்ப காலத்தில் உணவு பழக்கம், ஓய்வு, துாக்கம் இன்றியாமையாதது. அதை அவரவர் சவுகரியத்துக்கு ஏற்ற வகையில் திட்டமிடக்கூடாது. பிரசவ வலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு வார்டுக்கு வந்துவிடுவோருக்கு தக்க தைரியம் தருகிறோம். இயன்ற வரை முயற்சி செய்யுங்கள்; பொறுத்துக் கொள்ளுங்கள். சுகப்பிரசவம் உங்களுக்கு தான் ஆண்டு முழுதும், சிரமம் இல்லாதது என விழிப்புணர்வுடன் எடுத்துரைக்கிறோம்.- மகப்பேறு பிரிவு சிறப்பு மருத்துவர்கள்,அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை