திருப்பூர்:பிளஸ் 2 தேர்ச்சியில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியது. மாவட்டத்தில், மொத்தம், 16 அரசு பள்ளிகள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதித்தன. பெரும்பாலான அரசு பள்ளிகளில், 99 சதவீத தேர்ச்சி பெற்று நுாலிழையில் சாதனையை தவறவிட்டன.கடந்தாண்டு, பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், நடப்பாண்டு, 83 மாணவர், 66 மாணவியர் என, 149 பேர் தேர்வெழுதினர். கடந்தாண்டை போல நடப்பாண்டும், மாணவியர் முழுதேர்ச்சி பெற்று விட்டனர். ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெறாததால், இப்பள்ளி முந்தைய ஆண்டை (97.96) விட, 1.53 சதவீதம் கூடுதலாக பெற்றும், (99.19) சென்டம் வாய்ப்பு கை நழுவியது.கடந்த, 2023 ல், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 322 மாணவர்கள் தேர்வெழுதினர்; 291 பேர் தேர்ச்சி பெற்றனர்; 31 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 90.37. நடப்பாண்டு, 234 பேர் தேர்வெழுதினர். 13 பேர் தேர்ச்சி பெறவில்லை. முந்தைய ஆண்டை விட தேர்ச்சி சதவீதம், 4.07 உயர்ந்து, 94.44 சதவீதமாகியுள்ளது.பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 ம் ஆண்டு, 57 மாணவர், 98 மாணவியர் என, 155 பேர் தேர் வெழுதினர். ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை; மாணவியர் அனைவரும் (98 பேர்) தேர்ச்சி பெற்று, 99.35 தேர்ச்சி சதவீதம்.நடப்பாண்டும் இப்பள்ளியில் தேர் வெழுத, 72 மாணவியரும் தேர்ச்சி பெற்று விட்டனர். 51 மாணவர்களில் ஒருவர் மட்டும் தேர்ச்சி பெறாததால், இப்பள்ளி, 99.19 சதவீத தேர்ச்சியே பெற்றுள்ளது. திருப்பூர் குமார்நகர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 121 மாணவர், 99 மாணவியர் என, 220 பேர், 2023ல் தேர்வெழுதினர்.மாணவர்களில் ஏழு பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவியர், 99 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 96.82. நடப்பாண்டு தேர்வெழுதிய, 81 மாணவியரில் இருவர் தேர்ச்சி பெறவில்லை. 101 மாணவர்களில், ஏழு பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்தாண்டை போலவே, ஏழு மாணவர் தேர்ச்சியாகவில்லை. ஆனால், கடந்தாண்டு மாணவியர் அனைவரும் தேர்ச்சிஅடைந்திருந்தனர். இந்தாண்டு இருவர் தேர்ச்சி பெறாததால், தேர்ச்சி சதவீதம், 1.77 சதவீதம் குறைந்து, 95.05 ஆகி விட்டது.