உள்ளூர் செய்திகள்

நத்தம் நிலப்பதிவு!

திருப்பூர்;நத்தம் நிலத்துக்கான டிஜிட்டல் சேவை வழங்கும் திட்டம், விரைவில் காங்கயம் தாலுகாவில் துவங்கப்படுமென, நில அளவைப்பிரிவினர் தெரிவித்தனர்.வருவாய்த்துறையின் நிலப்பதிவேடு பராமரிப்பு என்பது, நீண்ட நாட்களாக புத்தக பதிவேடுகளாகவே இருந்து வருகின்றன. வருவாய் கிராமம், தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் என, மூன்று இடங்களில், வருவாய்த்துறை பத்திரப்பதிவுகள், நில அளவைத்துறையின் பதிவேடுகளும் பராமரிக்கப்படுகின்றன.ரயத்துவாரி நிலங்கள், நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ஆன்லைன் மயமாகிவிட்டன. விவசாயிகள், சிட்டா நகல் எடுக்க வேண்டுமெனில், இணையதளம் வாயிலாகவே எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், புலவரைபட நகலும் கிடைக்கிறது.பல்வேறு வளர்ச்சி ஏற்பட்ட போதிலும், நத்தம் நிலப்பதிவுகள் விவரம், டிஜிட்டல் மயமாகுவதில் இழுபறி நீடிக்கிறது. கடந்த, 2009ம் ஆண்டு முதல், நத்தம் நில விவரத்தை, ஆன்லைன் மயமாக்கும் பணி துவங்கியது. 'அ' பதிவு, சிட்டா மற்றும் அடங்கல் விவரம், புலவரைபடம் விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது.மூன்றுகட்டமாக சரிபார்ப்பு செய்த பிறகு, ஆன்லைன் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி ஆகிய தாலுகாக்களில், நத்தம் நிலப் பதிவு விவரம் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக, பொதுமக்களும், ஆன்லைன் வாயிலாக, நத்தம் நிலம் தொடர்பான சேவைகளை பெற்று வருகின்றனர்.சொத்து பரிவர்த்தனைக்கு பிறகு, பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு செய்வது போன்ற அனைத்து பணிகளும் ஆன்லைன் மயமாகிவிட்டன; பொதுமக்களின் சிரமமும் வெகுவாக குறைந்துவிட்டது.இந்நிலையில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகாவை தொடர்ந்து, காங்கயம் தாலுகாவில் நத்தம் நிலம் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கி விட்டது. தேர்தல் நடவடிக்கை நிறைவு பெற்றதும், காங்கயம் தாலுகாவிலும் நத்தம் நிலம் தொடர்பான டிஜிட்டல் சேவையும் துவங்க இருக்கிறது.இதுகுறித்து நில அளவைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:தமிழக அரசின் மின்னாளுமை திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலப்பதிவு ஆவணங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. 'தமிழ்நிலம்' இணையதளம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பட்டா நிலத்தை போலவே, நத்தம் நிலம் தொடர்பான சேவைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.அரசு உத்தரவுப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா இரண்டு தாலுகாக்களில் நத்தம் டிஜிட்டல் சேவை துவங்கப்பட்டு, வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தாலுகாவிலும், நிலப்பதிவுகளை மீண்டும் சரிபார்த்து, குழப்பங்களுக்கு தீர்வு கண்ட பிறகே 'டிஜிட்டல்' சேவைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாக்களை தொடர்ந்து, விரைவில் காங்கயம் தாலுகாவுக்கு, டிஜிட்டல் சேவைகள் துவக்கி வைக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை