| ADDED : ஜூன் 01, 2024 12:04 AM
திருப்பூர்:மணியகாரம்பாளையம் உயர் மட்டப்பாலத்தில் அணுகு சாலை முழுமையாக செய்து முடிக்காமல் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.திருப்பூரில், காங்கயம் ரோட்டையும், ஊத்துக்குளி ரோட்டையும் இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைத்த ரோடு உள்ளது. இதில், நொய்யல் ஆற்றின் மீது மணியகாரம்பாளையம் பகுதியில் உயர் மட்டப் பாலம் உள்ளது. இரு வழிப்பாதையாக அகலமாக இந்த ரோடு உள்ளது.இந்த பாலம் கட்டுமானத்திலிருந்து ரோட்டை சேரும் வகையில் அணுகு சாலை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இரு வழிப்பாதையாக உள்ள பாலத்தில் வடக்கு பகுதியில் ஒரு புறம் மட்டும் இந்த அணுகு சாலை தார் ரோட்டுடன் இணைக்காமல் குழியாக இருந்து. இதனால், வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அவதி நிலவியது.இந்நிலையில், ஆண்டுக்கணக்கில் இந்த அணுகு சாலை அமைக்காமல் நிலவியது. கடந்த இரு மாதம் முன்னர் இந்த இடத்தில் மண் கொண்டு வந்து கொட்டி நிரப்பப்பட்டது. இதனால் பாலம் மீது தடுமாறியபடி கடந்து சென்ற வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியடைந்தனர்.ஆனால், மண் கொட்டி நிரப்பியதோடு சரி, அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை. பாலம் இணைப்பு அணுகு சாலை தார் ரோடாக மாற்றப்படும் என எதிர்பார்த்த வாகன ஓட்டிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்பகுதியில் முழுமையாக தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.