திருப்பூர்:' பள்ளியின் உள்கட்டமைப்பு, பராமரிப்பு பணியை விரைந்து முடித்து, ஜூன், 6ம் தேதி பள்ளி திறப்புக்கு தலைமை ஆசிரியர்கள் தயாராக வேண்டும்,' என மாவட்ட கல்வித்துறை, அறிவுறுத்தியுள்ளது.கட்டடங்களின் மேற்பரப்பில் உள்ள குப்பைகளை அகற்றி, மழைநீர் வழிந்தோடுவதற்கான பாதை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறை மற்றும் மேஜை, இருக்கை உள்ளிட்ட பொருள்களை துய்மைப்படுத்தி, காலாவதியான ஆய்வக பொருளை முறைப்படி நீக்கம் செய்ய வேண்டும்.பயன்பாட்டில் உள்ள குடிநீர்தொட்டி, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் உட்புறம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, துாய்மையான, பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்த வெளி கிணறு, கழிவுநீர் தொட்டி மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.பழுதான நிலையில் உள்ள கட்டடங்கள், சுற்றுச்சுவர்களை மாணவர்கள் அணுகாதபடி தடுப்பு அமைக்க வேண்டும். அனைத்து மின்சாதனங்களும் நல்ல முறையில் உள்ளதா, மரங்களில் ஒடிந்த மரக்கிளைகள், கட்டடங்களுக்கு இடையூறாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வித்துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.இதற்கேற்ப பள்ளி நிர்வாகங்கள் தயாராகிவருகின்றன.பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, கல்வி செயல்பாடு தொடர்பான வழிகாட்டுதல்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை சரிவர பின்பற்ற வேண்டும். பள்ளி திறப்பு நாளில், பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தப்படும்.- கீதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்.
இறைவணக்கக் கூட்டம்
தவிர்க்கும் பள்ளிகள்------------------முதன்மை கல்வி அலுவலகம் நேற்று வழங்கிய அறிவுறுத்தல் மற்றும் உத்தரவுகளில், பள்ளிகளில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இறைவணக்கக்கூட்டத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அதே நேரம், இடவசதியை காரணம் காட்டி பெரும்பாலான பள்ளிகளில் இறைவணக்க கூட்டம் நடத்தப்படவில்லை. இதை மாவட்ட கல்வித்துறை நடப்பாண்டாவது கவனித்தால், நல்லது.