உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு திட்டக் குழாயில் எல் அண்ட் டி தண்ணீர் சப்ளை; ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

அத்திக்கடவு திட்டக் குழாயில் எல் அண்ட் டி தண்ணீர் சப்ளை; ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

பல்லடம்;அத்திக்கடவு குடிநீர் குழாய் மூலம் எல்.அண்.டி., தண்ணீர் சப்ளை செய்ய அனுமதி வழங்குமாறு, கலெக்டரிடம், பல்லடம் வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர்பழனிசாமி கூறியதாவது:பல்லடம் ஒன்றிய பகுதிகளில் பில்லுார் குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக நடைபெறவில்லை. பில்லுார் அணை வறண்டதை தொடர்ந்து, மாற்று ஏற்பாடாக, நீலகிரி மாவட்டம் போத்தி மந்து அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.இதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருவதுடன், அவ்வாறு வினியோகம் நடந்தாலும், இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது.இதற்காக, ஏற்கனவே உள்ள அத்திக்கடவு குடிநீர் குழாய்களை பயன்படுத்தி, காரணம்பேட்டை முதல் பல்லடம், பொங்கலுார் வரை இணைப்பு ஏற்படுத்தி எல் அண்ட் டி தண்ணீரை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை, அவசர அவசியமாக கருதி போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தர வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஊராட்சிகள் எல் அண்ட் டி தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம். நொச்சிபாளையம் பிரிவில் உள்ள நீரேற்று நிலையத்தில் அனுமதி பெற்ற லாரிகள் மூலம் 1,000 லி., 70 ரூபாய் என்ற கணக்கில் வினியோகம் செய்து கொள்ளலாம்.இதற்காக ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட குடிநீர் லாரிகளின் எண், உரிமையாளர், பெயர் உள்ளிட்ட விவரங்களை பி.டி.ஓ., மூலம் வழங்கி உரிய அனுமதி பெற வேண்டும். விவசாயக் கிணறுகளிலும் இதே நடைமுறையை பின்பற்றி குடிநீருக்காக மற்றும் தண்ணீர் வினியோகம் செய்யலாம். இந்த அனுமதி, 60 நாட்களுக்கு பொருந்தும். இந்தச் செலவுகளை ஊராட்சி சொந்த நிதியிலிருந்து செய்து கொள்ளலாம் என, கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி