உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பார் ஆக மாறிய வாரச்சந்தை வளாகம் l கள்ள மது விற்பனை கனஜோர் l கள்ளச்சாராயமா என மக்கள் அச்சம்

பார் ஆக மாறிய வாரச்சந்தை வளாகம் l கள்ள மது விற்பனை கனஜோர் l கள்ளச்சாராயமா என மக்கள் அச்சம்

திருப்பூர்;காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில், 12 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனையில்லாத நேரங்கள் மட்டுமின்றி 24 மணி நேரமும் சுற்றுப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடந்து வருகிறது.'டாஸ்மாக்' மதுக்கடை பார்களில் ரகசியமாக நடந்து வந்த இதுபோன்ற விதிமீறல்கள் சமீப காலமாக பகிரங்கமாகவே நடக்கிறது. உள்ளூர் போலீசார், மது விலக்கு போலீசார், கலால் துறையினர் என யாரும் இது குறித்து கண்டு கொள்வதில்லை என்று மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பகுதியை ஒட்டி, வாரச்சந்தை வளாகம் உள்ளது. இதன் அருகேயுள்ள மதுக்கடை பாரிலிருந்து, மதுக்கடை மூடப் பட்டுள்ள நேரங்களில் மது பாட்டில் விற்பனையாகிறது.மது பிரியர்கள் சவுகரியமாக வாரச்சந்தை வளாகத்தில் அமர்ந்து அதிகாலை முதலே மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை அதே இடத்தில் உடைத்து வீசுகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். காங்கயம் நகராட்சி தரப்பில் புகார் தெரிவித்தும் போலீஸ் நடவடிக்கை பூஜ்யமாக உள்ளது.

கள்ளச்சாராயமா?

சமீபத்தில், 'டாஸ்மாக்' மதுவில் போதை இல்லை என்று வெள்ளகோவில் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி மது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். சாராயம் மற்றும் சாராய ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.காங்கயம் பகுதியிலும் இது போல் கள்ளச்சாராயம், மது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கயத்தில் மற்றொரு கருணாபுரம் (கள்ளக்குறிச்சி) சம்பவம் போல் நடக்கும் முன் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை