திருப்பூர்:நல்லகட்டிபாளையத்தில், ஸ்ரீதொட்டைய சுவாமி வம்சாவழி குல தெய்வங்கள் பெரியதனம் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, தொட்டியநாயக்கர், எர்கொல்லவசம் மாலவ குலத்தை சேர்ந்த தொட்டைய சுவாமி, மால கஞ்சம்மாள் சுவாமி வம்சா வழி குல தெய்வங்கள், பெரியதனம் பட்டம் சூட்டும் விழா, ஊத்துக்குளி தாலுகா மொரட்டுப்பாளையம் ஊராட்சி நல்லகட்டிபாளையம் கிராமத்தில் விமரிசையாக நடந்தது.விழா, 36 பெரியவர்கள் முன்னிலையிலும், பெரியதனம் மற்றும் ஊர் நாயக்கர்கள் தலைமையிலும், நான்கு சீமை பெரியதனக்காரர்கள் வாழ்த்துக்களுடன், பாரம்பரிய முறைப்படி நடந்தது.இரட்டை கிணறை சேர்ந்த, மறைந்த சுப்பநாயக்கரின் பேரன் தேவராஜூக்கு, பெரியதனம் பட்டம் சூட்டப்பட்டது. தொட்டிய மண்ணரை வேலுசாமிக்கு இணை பெரியதனம் பட்டமும், பட்டவராயன்பாளையம் பழனிசாமிக்கு கோடசி நாயக்கர் பட்டமும் சூட்டப்பட்டது.திருப்பூர் மாலகஞ்சம்மாள் கோவில் நடந்த பூஜையில், வாலியூர் பூஜாரி ரமேஷ், நல்லகட்டிபாளையம் தொட்டைய சுவாமி கோவிலில் நடைபெற்ற பூஜையில், சப்பட்ட நாயக்கன்பாளையம் பூஜாரி தொட்டநாயக்கர் ஆகியோர் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் செய்து பட்டம் சூட்டினர்.முன்னதாக, பட்டம் சூடிய தேவராஜ், சப்பட்ட நாயக்கன்பாளையத்தில் இருந்து கூலிபாளையம் நால்ரோடு, பாரப்பாளையம், தொட்டிய மண்ணரை, கவுண்டநாயக்கன்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோவிலுக்கு, அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் ஊர்வலமாக சென்று வந்தார்; அதற்கு பிறகு பட்டம் சூட்டும் விழா விமரிசையாக நடந்தது.விழாவில், மாலவ குலத்தை சேர்ந்தவர்களும், ஊர் பொதுமக்களும் பங்கேற்றனர்.