திருப்பூர்:முறையான வருவாய்த்துறை ஆவணங்கள் இருந்தும் வண்டித்தடத்தை ஆக்கிரமித்து, விவசாய பூமிக்கு செல்லவிடாமல் தடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார். அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.பத்திரம் இழுத்தடிப்பு பல்லடம், அய்யம்பாளையம் பகுதி மக்கள் திரண்டுவந்து அளித்த மனு:கே.அய்யம்பாளையம் ராஜிவ் காலனியில், 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 35 ஆ ண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறோம். கே.அய்யம்பாளையம் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் வேலுசாமி, ஒவ்வொரு குடும்பத்திடமும் 1350 ரூபாய் ரொக்கம் பெற்று, தனியாரிடமிருந்து 4.5 ஏக்கர் நிலம் வாங்கினார்; 50 குடும்பங்களுக்கு தலா 1.75 சென்ட் வீதம் பிரித்துக்கொடுத்தார். மீதமுள்ள நிலத்தையும், வழித்தடத்தையும் வழங்கவில்லை. சிலருக்கு அசல் கிரய பத்திரம் வழங்கவில்லை. எங்களுக்கு சேரவேண்டிய நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி, கம்பிவேலி அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர். அவரிடம் பலமுறை கேட்டும், பத்திரத்தை வழங்காமல் இழுத்தடித்துவருகிறார். எங்கள் நிலத்துக்கான அசல் பத்திரத்தையும்; நிலம் மற்றும் பாதையை மீட்டுத்தரவேண்டும்.ஏ.ஜி., சபை திறக்கப்படுமா?தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் அளித்த மனு:திருப்பூர் பங்களா ஸ்டாப் ராமையா காலனி 3வது வீதியில், ஏ.ஜி., சபை அமைந்துள்ளது. பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதால், மதபோதகர் பரமானந்தம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த சபை நிர்வாகம், பணியில் இருந்து நீக்கியது. பரமானந்தம் தனது ஆதரவாளர்களுடன் வந்து பிரச்னை செய்ததால், திருப்பூர் வடக்கு போலீசார், சபையை பூட்டிவிட்டனர். இதுதொடர்பாக இருதரப்பினர் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணை, ஆர்.டி.ஓ.,வால் முடித்து வைக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளாக சபை மூடப்பட்டுள்ளது; ஏ.ஜி., சபையை திறந்து மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.பஸ் வசதியில்லைசின்னபுத்துாரை சேர்ந்த செந்தில்குமார்: பல்லடத்திலிருந்து 63 வேலம்பாளையம், பூமலுார், இச்சிப்பட்டி வழியாக, சோமனுார் வரை, பி-27 எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். பல்லடத்திலிருந்து சோமனுார் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், பஸ் வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். பி-27 அரசு பஸ்ஸை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கவேண்டும்.மயானம் ஆக்கிரமிப்புஉத்தமபாளையம் கிராம மக்கள் அளித்த மனு:காங்கயம் தாலுகா, உத்தமபாளையம் கிராமம், பெரியதாளக்கரையில், 50 குடும்பங்கள் வசிக்கிறோம். ரீ.ச. 102 ல் உள்ள நிலத்தை, கடந்த நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, மயானமாக பயன்படுத்திவருகிறோம். தனியார் ஒருவர், மயானத்தை, கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துக்கொண்டார். மயானம் இல்லாததால், இறந்தவர்களை புதைக்கவும், இறந்த முன்னோர்களை வழிபடவும் முடியாமல் தவிக்கிறோம். தனியாரிடமிருந்து மயானத்தை மீட்டுத்தரவேண்டும் என, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.அவிநாசி தாலுகா, தண்ணீர் பந்தல்பாளையம் அல்லமுத்து:உப்பிலிபாளையத்தில் உள்ள விவசாய பூமிக்கு செல்லும் வண்டிப்பாதையில், ஊராட்சி நிர்வாகம் மெட்டல் ரோடு அமைத்துள்ளது. தனியார் ஒருவர், வண்டிப்பாதையில் கம்பிவேலி அமைத்து, விவசாய பூமிக்கு செல்லவிடாமல் தடுத்துள்ளார். வண்டித்தடம் குறித்த விவரங்கள் வருவாய்த்துறை ஆவணங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, விவசாய பூமிக்கு செல்லும் வண்டித்தடத்தை மீட்டுத்தரவேண்டும், என, மனு அளித்துள்ளார்.நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 560 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் வாங்கினோம்; நடவடிக்கை எடுக்காமல் மாதக்கணக்கில் டேபிளுக்கு அடியில் வைத்தோம் என்றில்லாமல், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.
கந்து வட்டி
கொடுமை பெருந்தொழுவு, பள்ளக்காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன், 61 என்பவர், மனைவியுடன் வந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். கந்துவட்டி நபர்களிடமிருந்து தனது நிலத்தை மீட்டுத்தரக் கேட்டும், கொலை மிரட்டல் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு அளித்தார்.