திருப்பூர்;மாவட்டங்களில் இருந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், அறிவித்த நாளில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை ஆயத்தமாகி வருகிறது.மார்ச், 1 முதல், 22ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது; மாவட்டத்தில், 92 மையங்களில், 26 ஆயிரத்து, 325 மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி, 26ம் தேதி துவங்கியது.குமார் நகர், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களுக்கு மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. இப்பணி, கடந்த, 6ம் தேதி முடிக்கப்பட்டது.மாணவ, மாணவியரின் மதிப்பெண்களை பதிவேற்றும் பணி இரு வாரங்கள் சுறுசுறுப்பாக நடந்தது. கடந்த, 20ம் தேதியுடன் மாவட்ட அளவில் பொதுத்தேர்வு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, விவரங்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதால், முன்கூட்டியே அறிவித்தபடி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே, 6ம் தேதி வெளியாக உள்ளது.அன்றைய தினம், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை காலை, 10:00 மணிக்கு வெளியிட உள்ளனர்.