| ADDED : ஜூன் 14, 2024 12:00 AM
பல்லடம் : பல்லடம் போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் வழித்தடம் கும்மிருட்டாக காணப்படுகிறது. தெருவிளக்கு வசதி மற்றும் 'சிசிடிவி' கேமரா கண்காணிப்பு அவசியமாகிறது.பல்லடம், திருச்சி ரோட்டில், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனும், அருகிலேயே அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது. இதன் பின், போலீசார் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.பல்லடம் உட்கோட்டத்தில் வேலை பார்க்கும் நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் குடும்பங்கள் வசிக்கின்றன. பகல் மற்றும் இரவு பணிகளுக்கு மாறி மாறி சென்று வரும் போலீசார், கிடைக்கும் நேரங்களில் வீடுகளுக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.போலீஸ் ஸ்டேஷன் அருகில்தான் போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் வழித்தடம் உள்ளது. இந்த வழி நெடுக போலீசாரின் இருசக்கர வாகனங்கள் உட்பட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன.பெரும்பாலும் இந்த வழித்தடம் விளக்கு வெளிச்சம் இன்றி கும்மிருட்டில் காணப்படும். குழந்தைகள் அவ்வப்போது இப்பகுதியில் விளையாடி வரும் நிலையில், விஷ ஜந்துக்கள் வந்தாலும் தெரியாத நிலைதான் உள்ளது. எனவே, குடியிருப்புக்குச் செல்லும் வழித்தடத்தை பராமரித்து, தேவையான இடங்களில் தெருவிளக்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்தி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.---பல்லடம் போலீஸ் குடியிருப்புக்குச் செல்லும் வழித்தடம் கும்மிருட்டாக காணப்படுகிறது.
திருட்டு முயற்சி?
போலீஸ் குடியிருப்பிலேயே திருட்டு முயற்சி நடந்துள்ளது. சமீபத்தில், மூன்று குடியிருப்புகளில் திருட்டு முயற்சி நடந்ததாகவும், இச்சம்பவம் குறித்து போலீசார் மறைமுக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீசாரிடம் கேட்டதற்கு, 'அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. விசாரித்து சொல்கிறோம்,' என்று மட்டும் கூறினர்.