உடுமலை:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கு, ஒரு கட்டுபாடு விதிக்க வேண்டும் என, கிராமப்புற பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் மொத்தமாக 18 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அரசுப்பள்ளிகளின் சேர்க்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, சேர்க்கையும் அதிகரிக்கிறது.ஆனால், மேல்நிலை வகுப்புகளின் போது சிறப்பான ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வசதிகள் என பல இருந்தும், கிராமப்பகுதி பள்ளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.இதனால் பெரும்பான்மையான கிராமப்பகுதி அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை, ஒற்றைப்படைக்கு தள்ளப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, பிளஸ் 1 சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடக்கிறது.இதில், பூலாங்கிணர், வாளவாடி, உடுக்கம்பாளையம், தேவனுார்புதுார் உட்பட பல கிராமப்புற பள்ளிகளில், திறமையான ஆசிரியர்கள், பஸ் வசதி, பள்ளியின் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.ஆனால் மேல்நிலைவகுப்புகளுக்கு இப்பள்ளிகளை தேர்ந்தெடுக்க மாணவர்கள் புறக்கணிக்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என மொத்தமாகவே 200க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ளது.அதே நேரத்தில் சமன்பாடில்லாமல், உதவிபெறும் பள்ளிகளிலும், நகரப்பகுதி அரசு பள்ளிகளிலும் எண்ணிக்கை எல்லை மீறுகிறது.இதனால், 20 முதல் 30 வரை மாணவர்கள் இருக்க வேண்டிய ஒரு வகுப்பில், 60 - 80 வரை எண்ணிக்கை இருக்கும் நிலை ஏற்படுகிறது.மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்ற நடைமுறையால் இப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.இதனால் கிராமப்புற பள்ளிகள் சிறப்பான முறையில் இருந்தும், பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பள்ளிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரச்னைக்கு கல்வித்துறை மட்டுமே தீர்வு காண முடியும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.கிராமப்புற பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், கல்வித்தரம் சிறப்பாக இருக்கும் என பெற்றோர் எண்ணுகின்றனர். கிராமப்புற பள்ளிகளை முன்னெடுத்துச்செல்வதில், பெற்றோருக்கு பங்குள்ளது.பொதுத்தேர்வுகளில் அதிகப்படியான தேர்ச்சி சதவீதம் மற்றும் சிறப்பு செயல்பாடு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலும் இப்பள்ளிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.இருப்பினும் தொடர்ந்து சேர்க்கையில் கிராமப்பகுதி பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இதற்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கு, ஒரு கட்டுபாடு விதிக்க வேண்டும்.மேலும், அவ்வாறு உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையில், பள்ளியின் அருகிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும்.இந்நிலை தொடர்ந்தால், அதிகமான மாணவர் எண்ணிக்கையாலும், மாணவர்களே இல்லாத சூழ்நிலையால் பல பள்ளிகளும், கல்வித்தரத்தை இழக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.