அவிநாசி : அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையில், வாகன ஓட்டிகளின் அதிவேக பயணத்தால், அவ்வப்போது விபத்து நேரிடுகிறது.அவிநாசி - மேட்டுப்பாளையம் ரோட்டில், தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. நம்பியாம்பாளையம், கருவலுார், அன்னுார், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட குன்னுார், கோத்தகிரி, ஊட்டி, கூடலுார் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர்.குறிப்பிட்ட சில இடங்களில், அடிக்கடி வாகன விபத்தும் நேரிடுகிறது; இதில், வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். சில நேரங்களில், உயிர்பலியும் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'வாகன ஓட்டிகள் பலர், குறிப்பாக, டூவீலரில் பயணிப்போர் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்; இதனால், கட்டுப்பாடு இழந்து, விபத்தை எதிர்கொள்கின்றனர். அதிவேகமும், கவனக்குறைவும் தான், விபத்துக்கு முக்கிய காரணம். அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில், வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.நெடுஞ்சாலைத்துறையினர் சிலர் கூறியதாவது: இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்க கொள்கை ரீதியாக முடிவெடுக்கப்பட்டும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், சாலையை பராமரிப்பதில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரிடம் குழப்பம் நீடிக்கிறது. இச்சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதற்கான பரிந்துரை அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால், அத்துறை சார்பில் தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போலீசார் கூறுகையில், 'வாகன ஓட்டிகள் கட்டுப்பாடில்லாத வேகத்தில் வாகனங்கள் செலுத்துவதை தவிர்த்தாலே, பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும்' என்றனர்.