உடுமலை : பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், போதிய பஸ்கள் இல்லாததால், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம், கரூர் செல்லும் வழித்தடத்தில், 50க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.இவ்வழித்தடத்திலுள்ள கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள், அதிகளவு தொழிற்கல்வி மற்றும் மேற்படிப்பிற்காக பொள்ளாச்சி பகுதிக்கு செல்கின்றனர்.மேலும், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இவ்வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணிக்கின்றனர். இவ்வாறு நாள்தோறும் அதிகளவு பயணியர் செல்லும், வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை.இதனால், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில், 20 நிமிட இடைவெளியில், பொள்ளாச்சி - பெதப்பம்பட்டி நகர பஸ்சும், தாராபுரத்திற்கு செல்லும் மப்ஸல் பஸ்களும் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.பள்ளி நாட்களில், பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம் உட்பட அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் மப்ஸல் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளதால், அப்பஸ்களில் பல மடங்கு கூட்டம் பயணிக்க வேண்டியுள்ளது.சில நேரங்களில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொழிற்கல்விக்காக பொள்ளாச்சிக்கு செல்லும் மாணவர்களும், போதிய பஸ்கள் இல்லாமல், பாதிக்கப்படுகின்றனர்.இப்பிரச்னை குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.இனிமேலாவது, இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.