உடுமலை;கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்மேற்கு பருவ மழையும் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இதனால், காய்கறி சாகுபடிக்காக பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், காய்கறி பயிர் சாகுபடி பிரதானமாக உள்ளது. குறைந்த கால சாகுபடி, மகசூல், வருவாய் என்ற அடிப்படையில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.சாகுபடிக்கு தேவையான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள், தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் உள்ளன.ஒவ்வொன்றும், தலா, 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். நாற்று வகைக்கு ஏற்ப, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்களை வாங்கி, விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.தக்காளி நாற்று, 60பைசாவுக்கும், மிளகாய், 90 பைசாவுக்கும், கத்தரி, 50 பைசாவுக்கும், காலிப்ளவர், 70 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.சாகுபடி காலம் குறைவு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் நாற்றுக்களை வாங்கி, நேரடியாக நடவு செய்து வருகின்றனர்.கடந்த இரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளில் கோடை கால மழை தீவிரமடைந்துள்ளது.இதனால், இறவை பாசனத்திலுள்ள விவசாயிகளும், தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்தும் குறுகிய கால சாகுபடியான காய்கறி நடவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், நாற்றுப்பண்ணைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.இரு மாத இடைவெளிக்குப்பின், நாற்றுக்கள் உற்பத்தியும் தீவிரமடைந்துள்ளது. தக்காளி விலை, 14 கிலோ கொண்ட பெட்டி, 750 ரூபாய் வரை விற்று வருவதால், அதிகளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்ளவும், அடுத்ததாக மிளகாய் அதிகளவு சாகுபடி மேற்கொள்கின்றனர்.ஒரு சில விவசாயிகள் கத்தரி, காலிப்ளவர் சாகுபடி மேற்கொள்கின்றனர். தக்காளி நாற்று உற்பத்தி அதிகம்
நாற்றுப்பண்ணையாளர்கள் கூறியதாவது:கோடை கால மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்து தென்மேற்கு பருவ மழையும் துவங்க வாய்ப்புள்ளதால், மழையை பயன்படுத்தி நிலங்களை உழவு செய்து வருகின்றனர்.தற்போது நல்ல மழை கிடைத்து வரும் நிலையில், அடுத்து துவங்கும் தென் மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து, காய்கறி சாகுபடி மேற்கொள்ள ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது.நாற்றுப்பண்ணைகளில், குழித்தட்டுகளில் காய்கறி விதை நடவு செய்து, 20 முதல், 25 நாட்கள் வளர்ந்த நாற்றுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனை, வயல்களில் நடவு செய்யும் போது, ஒரு மாதத்திலிருந்து அறுவடைக்கு தயாராகும்.உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு இருக்கும் என்பதால், நாற்றுப்பண்ணைகளில், 70 சதவீதம் தக்காளி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மிளகாய், 20 சதவீதமும், கத்தரி, காலிப்பிளவர், 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில், அதிகளவு தக்காளி, மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.