| ADDED : ஜூன் 12, 2024 10:34 PM
திருப்பூர்: காங்கயம் நகராட்சி, அகிலாண்டபுரத்தில், ஆறு ஏக்கர் பரப்பளவில் பதுமன் குளம் உள்ளது. குளத்தில் தேங்கும் நீரால், 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்றுள்ளது. தற்போது, இந்த குட்டை, சாக்கடை கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறி விட்டது.நகராட்சியின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் கழிவுநீர் பதுமன் குளத்திற்கு வந்து சேர்கிறது. குளத்தின் நீர் முற்றிலும், சாக்கடைகழிவு நீராக மாறியதால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது.குட்டையில் தேங்கும் கழிவுநீர் நிலத்தில் இறங்கிய நிலையில், சுற்றுப்பகுதி முழுவதும் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீராதாரம் மாறிப் போனது. கிணற்று நீர் விவசாய பாசனத்துக்கோ, குடிநீராகவோ பயன்படுத்த முடியாமல் மாறி விட்டது.பதுமன் குள பாசன விவசாயிகள் சங்கம் தொடர்ந்து விடுத்த கோரிக்கையால், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், துார்வாருதல், கழிவு நீர் சுத்திகரிப்பு, நடைபாதை, பொழுது போக்கு பூங்கா ஆகியவற்றுக்காக, 2022ல் 4.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்கான பணிகள் துவங்கியது.இரண்டாண்டு ஆகியும், தற்போது குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் ஆங்காங்கே தடுப்பு சுவர்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கிய நிலையில் குளத்தை துார்வாரி பணிகளை விரைவில் முடித்தால் மட்டுமே, நகராட்சி பகுதியில் ஆழ் துளை கிணறுகளில் நன்னீர் கிடைக்க வாய்ப்புள்ளது.