| ADDED : ஜூன் 12, 2024 10:37 PM
திருப்பூர் : மங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை சிதறடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோதே, மங்கலம், வஞ்சிபாளையம், பூமலுார், தெக்கலுார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை, சோமனுார் கோட்டத்திலிருந்து பிரித்து, திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கவேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு தற்போது நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.அக்ரஹாரபுத்துார், கோம்பக்காடு, பூமலுார், மங்கலம், பரமசிவம்பாளையம் உள்பட ஏழு உதவி பொறியாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.தற்போதைய சீரமைப்பின் ஒருபகுதியாக, மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை சிதறடிக்க திட்டமிட்டுள்ளனர். மங்கலத்தில் உள்ள ஏழு உதவி பொறியாளர் அலுவலகங்களையும், பல்லடம், அனுப்பர்பாளையம், வீரபாண்டி ஆகிய தொலை துாரத்திலுள்ள மூன்று வெவ்வேறு உதவி மின் பொறியாளர் அலுவலகங்களுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.இதனால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.