உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டுக்கூடு உற்பத்தி வறட்சியால் பாதிப்பு

பட்டுக்கூடு உற்பத்தி வறட்சியால் பாதிப்பு

உடுமலை:தமிழகத்தில், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, திண்டுக்கல், சேலம், ராசிபுரம், கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது. இங்கு, 22,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர்.இளம் புழு வளர்ப்பு மனைகளில், ஏழு நாட்கள் வளர்ந்த பட்டு புழுக்களை வாங்கி, வளர்ப்பு மனைகளில் மல்பெரி இலைகளை உணவாக கொடுத்து, 21 நாட்கள் பராமரித்து, கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.நான்கு மாதமாக நிலவும் கடும் வறட்சி காரணமாக, பட்டுக்கூடு உற்பத்தி, 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. சராசரியாக, 100 முட்டை தொகுதிக்கு, 90 கிலோ வரை கூடு கிடைக்கும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், 30 கிலோ கூட கிடைக்கவில்லை. நீர் பற்றாக்குறையால், மல்பெரி செடிகளும் பாதித்து உள்ளன.பட்டுக்கூடு விவசாயிகள் அரசு வறட்சி நிவாரணம் வழங்கவும், காப்பீட்டு தொகை செலுத்தியதில், உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 20ம் தேதி, மாநிலம் முழுதும் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுஉள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ