உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆநிரைகளுக்காக உயிர்நீத்த வீரர்கள் நடுகல் வைத்து வழிபாடு

ஆநிரைகளுக்காக உயிர்நீத்த வீரர்கள் நடுகல் வைத்து வழிபாடு

உடுமலை;உடுமலை அருகே, பழமை வாய்ந்த நவகண்டம் மற்றும் ஆநிரைகளுக்கான கற்சிலைகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் பார்வையிட்டு ஆவணப்படுத்தினர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களிலுள்ள, பழமை வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது.இத்தகைய வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வரலாற்று ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்பினரும் களப்பணியில் ஈடுபட்டு, ஆவணப்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், பண்ணைக்கிணறு, பீக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஆய்வு செய்தனர்.அக்குழுவினர் கூறியதாவது: பண்ணைக்கிணறு, பீக்கல்பட்டி பகுதியில், அப்பம்மா, அவ்வதாத்தா எனப்படும் முன்னோர்களை குறிப்பிடும், நடுகற்களை வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.இது நாயக்க மன்னர்கள் காலத்தில், நடந்த நிகழ்வுகளுக்காக வைக்கப்பட்ட புடைப்பு சிற்பமாகும். நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட இச்சிற்பத்தில், வீரன் விலங்குகளை தாக்குவது போலவும், இன்னொரு கையில், துப்பாக்கி ஏந்திய நிலையிலும், அருகில் பெண் உருவம் கொண்ட புடைப்பு சிற்பமும் உள்ளது. அடிப்பாகத்தில் முயல், நாய், மான் ஆகியவற்றின் சிற்பம் உள்ளது.'போருக்கு செல்லும் போதோ அல்லது மன்னர்களுக்காகவோ, தலைவனுக்காகவோ, ஒருவன் தன்னுடைய தலையை தானே அறுத்து உயிர் விடும் நவகண்ட சிற்பம் பீக்கல்பட்டியில் உள்ளது.மார்கழி, தை மாதங்களில், பண்ணைக்கிணறு சுற்றுப்பகுதியிலுள்ள கால்நடை வளர்ப்போர் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.வழக்கமாக, உடுமலை பகுதியில், மாலை கோவில் எனப்படும் சமூக அடுக்குகள் ஏழு அல்லது ஒன்பது அல்லது அதற்கான மேலான அடுக்குகளில், உயரமான கற்துாண்கள் வழிபாட்டில் உள்ளது.சில இடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நடுகற்கள் வெட்டவெளியில் இது போன்று உள்ளது. பீக்கல்பட்டியிலும் 20க்கும் மேற்பட்ட நடுகற்களை நட்டு, முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து வருகின்றனர்.இத்தகைய நடுகற்கள் மேய்ச்சல் தொழில் உயர்ந்த நிலையில் இருந்ததும், கால்நடைகளுக்காக தங்கள் உயிரையும் விட்டு பாதுகாத்துள்ளது தெரியவருகிறது.இவ்வாறு, அக்குழுவினர் தெரிவித்தனர்.ஆய்வின் போது, தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி, அருட்செல்வன், சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ