திருப்பூர்;பசுமை ஆற்றல் மற்றும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கான முதலீட்டு மானிய திட்டங்களை அரசு விரைவில் அறிவிக்கும் என, மத்திய அரசுத்துறை செயலர் தெரிவித்துள்ளதால், தமிழக தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்; ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட ஏதுவாக, அரசுத்துறை செயலர்கள் மாநிலம் வாரியாக சென்று, தொழில்துறையினரை சந்தித்து வருகின்றனர்.அதன்படி, மத்திய மற்றும் மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை செயலர் தாஸ், 'நிடி ஆயோக்' அமைப்பின் தலைமை ஆலோசகர் இஷ்டியாக் அகமது உள்ளிட்ட அரசுத்துறையினர், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வந்து, தொழில்துறையினரை சந்தித்தனர்.தொழில் வளர்ச்சிதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த சந்திப்பில், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கங்கள், ஒட்டுமொத்த பனியன் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், ஜவுளி ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு உயர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டும் திருப்பூர் முக்கிய இடத்தில் இருக்கிறது.ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்க, உற்பத்தி மானிய திட்டம் அரசு பரிசீலனையில் உள்ளது. எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு, பசுமை ஆற்றல் உற்பத்தியும் அவசியம்; அதற்கான உற்பத்தி மானிய திட்டமும் பரிசீலனையில் உள்ளது;மத்திய அரசு விரைவில் இத்திட்டங்களை அறிவிக்கும் என, மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் தாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு செயலரின் இத்தகைய அறிவிப்பு, மின் கட்டண சுமையால் தவிக்கும் தொழில்துறையினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதற்கான மானிய திட்டமும் பட்ஜெட்டில் வெளியாகுமென, தொழில்துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
படம் வைக்கவும்
காத்திருக்கிறோம்...புதிய செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழில் துவங்க, முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். மின் கட்டண சுமையை குறைக்க ஏதுவாக, சோலார் மின் உற்பத்திக்கான மானிய திட்டம் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இவ்விரு திட்டங்களும், விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படுமென, திருப்பூர் வந்திருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் இத்தகைய அறிவிப்பு வெளியாகுமென, காத்திருக்கிறோம்.- சுப்பிரமணியன்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்