உடுமலை:உடுமலை அருகே, பலத்த காற்றினால், அறுவடைக்கு தயாராகி வந்த, வாழை மரங்கள், அடியோடு சாய்ந்து விட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு, பரவலாக வாழை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர்.இந்நிலையில், நேற்று முன்தினம், கோட்டமங்கலம் சுற்றுப்பகுதியில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், பல ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.அப்பகுதியைச்சேர்ந்த, சிவக்குமார். சுகிர்தா, கதிர்வேல் உள்ளிட்டோரின் விளைநிலங்களில் மட்டும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் காற்றினால், அடியோடு சாய்ந்து விட்டன.வாழைத்தார் விட்டு அறுவடைக்கு தயாராகி வந்த மரங்கள் சாய்ந்துள்ளதால், விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: நேந்திரன் வாழை 14 - 15 மாதங்கள் வயதுடையதாகும். தற்போது கோட்டமங்கலத்தில், பாதிக்கப்பட்டுள்ள வாழை மரங்களுக்கு, 12 மாதங்களாகிறது.வாழைத்தார் விட்டு, அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது. ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளோம்.காற்றினால் சாய்ந்த வாழை மரங்களில் இருக்கும் வாழைத்தாரை விற்பனை செய்ய முடியாது. சாகுபடி முழுவதுக்குமான வருவாய் கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஓராண்டு பராமரித்த வாழை மரங்கள் சாய்ந்து விட்டதால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை வாயிலாக ஆய்வு செய்து, பாதிப்பை முழுமையாக கணக்கிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.