| ADDED : ஜூன் 16, 2024 10:54 PM
திருப்பூர் : திருப்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு பஸ் தினமும் ஒரு முறை கோபிக்கு மாற்று பஸ்சாக இயக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் இந்த பஸ், மதுரையில் இருந்து திருப்பூர் வந்து, புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கோபி புறப்பட்டது. அப்போது, முதியவர் ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் பஸ்சில் ஏறினார். அவரை நடத்துனர் தங்கராஜ் பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். எதுவும் பேசாமல் இறங்கிய அந்த முதியவரை, இரும்பு கம்பியால் அடித்து விடுவதாக மிரட்டியதுடன், கீழே தள்ளியும் விட்டார். இதில் தடுமாறிய முதியவர் கீழே விழுந்து, சிறிது நேரம் கழித்து எழுந்து சென்றார். அரசு பஸ் நடத்துனரின் இந்த செயலை, அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.வீடியோவை ஆதாாரமாக கொண்டு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடத்துனர் தங்கராஜ், டிரைவர் முருகன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கோபி கிளை ஈரோடு போக்குவரத்துக் கழகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.'முதியவர் போதையில் இருந்தார். சக பயணியருக்கு இடையூறு செய்யும் வகையில் யாரேனும் போதையில் ஏறினால், அவர்களை இறக்கி விடும்படி நிர்வாகம் தெரிவித்துள்ளது; அதனால் தான் இறக்கி விட்டோம்' என, விசாரணையில் இருவரும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.