சுதந்திர போராட்டம் நிறைந்த, 18ம் நுாற்றாண்டின் இறுதி, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடி இன்னுயிர் ஈந்தவர்களில் ஒருவர் தீர்த்தகிரி என்கிற தீரன் சின்னமலை.கலை, இலக்கியம், வனம், பண்பாடு, உயரிய வாழ்க்கை, வீரம், பழம் பெருமை, இயற்கை சூழல் என, வளம் கொழித்த பகுதியாக கொங்கு பகுதி விளங்கியது. காங்கயம் மேலப்பாளையத்தை சொந்த ஊராக கொண்ட தீரன் சின்னமலை, சிலம்பாட்டம், தடி வரிசை, மல்யுத்தம், வில் வித்தை, வாள்வீச்சு என அத்தனை வீர விளையாட்டுகளிலும் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருந்தார் என்பது வரலாறு.தீரன் சின்னமலையின் தீரமிக்க வீர வரலாறு குறித்து, கொங்கு பண்பாட்டு மைய தலைவர் ஆதன் பொன் செந்தில்குமார் நம்மிடம் பகிர்ந்தவை:ஒரு நாள், சின்னமலை அரச்சலுார் மலைக்கு சென்று, மேலப்பாளையம் நோக்கி செல்லும் போது, குதிரையில் வந்த சில வீரர்களை சின்னமலை தடுத்து நிறுத்தினார். 'தாங்கள் மைசூரு மாமன்னர் ைஹதர் அலியின் பணியாட்கள்; தென் கொங்குநாட்டு வரிப்பணத்தை வசூலித்து, சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்கிறோம்' என கூறியுள்ளனர்.இதைக் கேட்டு, கொதித்தெழுந்த சின்னமலை, பணமூட்டையை பறித்தார். வடக்கே சென்னிமலை, தெற்கே சிவன்மலை இரண்டு மலைகளிலும் முருகன் அருள்பாலிக்கிறார். அவர் அருளால் நாங்கள் நாட்டு மக்களுக்கு உழைக்க தயாராக உள்ளோம். சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை வந்து வரிப்பணத்தை வாங்கிக்கொண்டதாக சொல் என்று வீரர்களை அனுப்பி வைத்தார். அன்று முதல் சின்னமலையின் புகழ் கொங்கு நாடு முழுதும் பரவியது.பாடத்திட்டத்தில், தீரன் சின்னமலை வரலாற்றை விரிவாக கற்றுத்தர வேண்டும். தீரன் சின்னமலை பிறந்த இடம் துவங்கி, அவர் வளர்ந்த இடம், கோட்டை, கோவை புரட்சி நடந்த இடம், அவரை துாக்கிலிட்ட இடம் என, கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து, மாணவர் மத்தியில் தேசப்பக்தியை ஊட்ட வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு, அவர் கூறினார்.