| ADDED : ஆக 03, 2024 06:17 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உதயகுமார் நேற்று பொறுப்பேற்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கீதா, மே, 31ல் ஓய்வு பெற்றார். கோவை முதன்மை கல்வி அலுவலர் பால முரளி கூடுதல் பொறுப்பாக திருப்பூரையும் கவனித்து வந்தார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உதயகுமார் பதவி உயர்வு வழங்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.நேற்று, திருப்பூர் வந்த அவர், கலெக்டர் அலுவலக, ஐந்தாவது தளத்தில் உள்ள, மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில், சி.இ.ஓ., வாக பொறுப்பேற்றுக் கொண்டார். முதன்மைக்கல்வி அலுவலக அலுவலர்கள் புதிய சி.இ.ஓ.,க்கு வாழ்த்து தெரிவித்தனர்.மதுரை, துாத்துக்குடி, நாகை, சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றியுள்ள உதயகுமார், 17 ஆண்டுகளாக கல்வித்துறையில் பொறுப்பில் உள்ளார். கடந்த 2015ல் தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்.புதிய சி.இ.ஓ., உதய குமார் கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை கைப்பற்றியது, திருப்பூர் கல்வி மாவட்டம். இம்மாவட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சி. திருப்பூர் கல்வித்துறையின் தொடர் வெற்றிக்கும், அசுர வளர்ச்சிக்கும் துணை நிற்பதுடன், தொடர்ந்து நடப்பு கல்வியாண்டும் முதலிடத்தை தக்க வைப்பதற்கான முயற்சிகளை எடுப்பேன்,' என்றார்.