உடுமலை : அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், கடந்த, ஜூன் 24ல் நீர் திறக்கப்பட்டது.வரும் நவ., 6 வரை, 135 நாட்களில், 80 நாட்கள் நீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், நீர் வழங்கப்பட உள்ளது.நீர் திறப்பை தொடர்ந்து, பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.பாரம்பரிய முறையில் நாற்றங்கால் அமைத்து, நடவு செய்யும் முறைக்கு மாற்றாக, குறைந்த விவசாய தொழிலாளர்கள் பயன்பாடு, அதிக மகசூல் தரும் வகையில், நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.குறைந்த விதை நெல் தேவை, உரிய இடைவெளி விட்டு நடவு, அதிக மகசூல் என்ற அடிப்படையில், பெரும்பாலான விவசாயிகள் இயந்திரம் வாயிலாக, நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டனர்.இந்நிலையில், பாய் நாற்றங்கால் நடவு முறையிலும், விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:சாகுபடி செலவினங்களை குறைக்கும் வகையிலும், விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்தில் நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், பெரும்பாலான விவசாயிகள், இயந்திரம் வாயிலாக நேரடி நெல் விதைப்பு மேற்கொண்டனர்.தற்போது, கல்லாபுரம் பகுதியில், 50 ஹெக்டேர் பரப்பளவில், ஒரு சில விவசாயிகள் பாய் நடவு முறையில் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இம்முறையில், பாலிதீன் கவர் விரித்து, விதை நெல் துாவி நாற்றங்கால் அமைக்கப்படுகிறது.பின்னர், வயலில் சேற்று உழவு செய்து, சமன் செய்து, 11 முதல், 18 நாட்கள் வளர்ந்த நெல் நாற்றுக்கள் இயந்திரம் வாயிலாக, 22.5 செ.மீ., இடைவெளியில் வரிசையாக வயல்களில் நடவு செய்யப்படுகிறது.இதன் வாயிலாக, விதை நெல் குறைவு, களைகள் குறைவு, இடைவெளி அதிகரிப்பதால் துார்கள் அதிகளவு பிடித்து, 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும்.இம்முறையிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, நடவு செய்யும் நெல், நவ., - டிச., மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.