உடுமலை:மழைக்காலத்தில், கூட்டாற்றை கடக்க பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இக்குடியிருப்பில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.இரு மலைகளுக்கு இடையிலுள்ள, சமவெளியில், வீடுகள் கட்டி, விவசாய சாகுபடியிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சமவெளிக்கு வர, உடுமலை-மூணாறு ரோட்டிலுள்ள சின்னாறுக்கு வர வேண்டும்.குடியிருப்பில் இருந்து கரடுமுரடான, பாறைகள் நிறைந்த, 6 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியிலுள்ள மண் பாதையில் பயணித்து, சின்னாறுக்கு வேண்டும். இந்த வழித்தடத்தில், கூட்டாறு குறுக்கிடுகிறது.ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. மழைக்காலங்களில், ஆற்றை கடக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால், பல்வேறு பணிகளுக்காக கூட்டாற்றை கடந்து சின்னாறு வர முடியாமல் மக்கள் பாதிக்கின்றனர்.மேலும், பீன்ஸ் உள்ளிட்ட விளைபொருட்களையும் சந்தைப்படுத்த கூட்டாற்றை கடந்து எடுத்து வர சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில், பல கி.மீ., துாரம் சுற்றி நடந்து செல்ல வேண்டியுள்ளது.எனவே, கூட்டாற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.