உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலம்பட்டி சுங்கச்சாவடியால் ஊர் வளரும்! நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் விளக்கம்

வேலம்பட்டி சுங்கச்சாவடியால் ஊர் வளரும்! நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் விளக்கம்

திருப்பூர்;திருப்பூர் வேலம்பட்டி சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் இடைபட்ட சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்க, பொங்கலுார் ஒன்றியம், வேலம்பட்டியில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு, சில அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்பினர், வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.சுமூக பேச்சு வாயிலாக, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமையை நிறுத்தி வைக்குமாறு, திருப்பூர் சப்-கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.விவகாரம் தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் இடைபட்ட, 32 கி.மீ., ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறை தேசிய பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டே, இங்கு சுங்கச்சாவடி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். '2 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலையே இல்லை' என்ற புகார் எழுந்தது; அந்த பகுதி தவிர்த்து, 29.3 கி.மீ., துாரத்துக்கு தான், சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.'நீர்நிலையுள்ள இடத்தில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது' என்ற புகார், மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 'நீர்நிலையில், சுங்கச்சாவடி அமைக்க கூடாது; தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்; விரைவில் மாற்றிடம் ஏற்பாடு செய்து, அங்கு சுங்கச்சாவடி கட்டி கொள்ளலாம்' என்ற முந்தைய அரசு முதன்மை செயலரின் அறிவுறுத்தல் படி, மாற்றிடம் ஏற்பாடு செய்து வருகிறோம்.ஊர் வளரும்!சுங்கச்சாவடி அமைக்கப்படுவதன் வாயிலாக, உள்ளூரைச் சேர்ந்த, 40 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்; அந்த இடத்தில், ஓட்டல், விடுதி, கடைகள் உள்ளிட்டவை உருவாகும். அப்பகுதி வளர்ச்சி பெறும்; நில மதிப்பு உயரும். சுங்க கட்டணம் செலுத்தும் முறை, ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக இணைக்கப்பட உள்ளதாகவும், சுங்கச்சாவடி எல்லையில், 2 கி.மீ., எல்லைக்குள் வாகனங்கள் பயணித்தாலே, கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வரும் என்ற புகாரும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூர் வாகனங்களுக்கு சலுகை

'வாகனங்களுக்கேற்ப, ஆறு வகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; உள்ளூர் வாகன உரிமையாளர்கள், 330 ரூபாய் மாத கட்டணம் செலுத்தி, 'பாஸ்' பெற்றுக் கொண்டு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம். அதே போன்று, உள்ளூர் மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கும் கட்டண சலுகையுண்டு. சில வரைமுறைக்கு வாகனங்களுக்கான கட்டண சலுகையும் உண்டு; வெளியூர் வாகனங்கள் தான் முழு அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நுழைவுக்கட்டணம் வாயிலாக வசூலிக்கப்படும் தொகை, அந்த சாலை மேம்பாட்டுக்கு தான் பயன்படுத்தப்படும்,' என தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ