உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட எல்லையில் மிரள வைக்கும் மழை

மாவட்ட எல்லையில் மிரள வைக்கும் மழை

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எல்லையான அவிநாசி - தத்தனுார் சுற்றுவட்டார பகுதிகளில், மிக அதிகளவு மழை பெய்து, கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் இம்முறை கோடையில், இதுவரையில்லாத அளவு வெயில் வாட்டியது; அதிகபட்சம், 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் நிலவியது.தொடர்ந்து துவங்கிய கோடை மழையும், இதுவரை இல்லாத வகையில் பெய்து வருகிறது. சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு துவங்கிய மழை, 10:30 மணி வரை நீடித்தது. அவிநாசியில், 103 மி.மீ., மழை பதிவானது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாவட்ட எல்லையான புலிப்பார், போத்தம்பாளையம், தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அவிநாசி நகர்புறங்களை காட்டிலும் மிக பலத்த மழை பெய்திருக்கிறது. தொடர்ச்சியாக பெய்த மழையால், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

மழையளவில் குழப்பம்

அவிநாசி மற்றும், 5 கி.மீ., தொலைவிலுள்ள சேவூர் பகுதியில் பெய்யும் மழையளவு மாறுபடுகிறது. பல நேரங்களில், அவிநாசியில் மழை பெய்யும் சமயத்தில் சேவூரில் மழை பெய்வதில்லை. ஆனால், அவிநாசியை மையமாக வைத்து மட்டுமே மழையளவு கணக்கிடப்படுகிறது.அவிநாசியில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் புலிப்பார், தத்தனுார் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியாகவும், இந்த ஊராட்சிகள் உள்ளன. அவிநாசி நகர்ப்புறங்களில் பெய்யும் மழையை காட்டிலும், இப்பகுதிகளில் மிக அதிகளவு மழை பெய்கிறது; ஆனால், அதற்கான துல்லியான கணக்கெடுப்பு இல்லை. மழையளவையே துல்லியமாக கணக்கிட முடியாத நிலையில், அதனால் ஏற்படக்கூடிய வெள்ள பெருக்கு உள்ளிட்ட பாதிப்பை அறிவது, அதை எதிர்கொள்வது சாத்தியமில்லை என்ற விமர்சனத்தையும் அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.

துல்லிய கணக்கெடுப்பு

அவிநாசி ஒன்றியம், தத்தனுார் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறுகையில், ''மிக அதிகளவு மழையால், இந்திரா நகர் உள்ளிட்ட சில குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது; வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.மாவட்ட எல்லையில் மழையளவு தனியாக கணக்கிடப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியில் பெய்யும் மழையளவை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில், ஊராட்சி தலைமையகத்தில் மழைமானி பொருத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ