திருப்பூர், மே 3-காங்கயம் ரோட்டில், பஸ் ஸ்டாப் அருகே நிழல் தரும் வகையில் இருந்த பெரிய மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருப்பூர் - காங்கயம் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நுாற்றுக்கணக்கான மரங்கள் நட்டு பராமரிக்கப்படுகிறது. நகர எல்லைக்குள் அவ்வகையில் நடப்பட்ட மரக்கன்றுகள் ஏராளமானவை நன்கு வளர்ந்து நிழலும், காற்றும் தரும் வகையில் பயன்பட்டு வருகிறது.திருப்பூர் நகரில் பிரதான ரோடுகளில் அதிகளவிலான மரங்கள் அமைந்துள்ள ரோடாக காங்கயம் ரோடு உள்ளது குறிப்பிடத்தக்கது.அவ்வகையில், டி.எஸ்.கே., மருத்துவமனை பஸ் ஸ்டாப் பகுதியில் சில மரங்கள் நன்கு வளர்ந்து பயனளித்து வருகின்றன.இந்நிலையில், பயணிகள் பஸ்சுக்கு காத்திருக்கும் வகையில், நிழல் தரும் விதமாக வளர்ந்து நின்ற பெரிய மரம் ஒன்று சில நாள் முன் வெட்டி அகற்றப்பட்டது. அப்பகுதியில் தனியார் ஒருவர் புதிய கட்டடம் கட்டி வருகிறார். அந்த கட்டடத்துக்கு இடையூறு எனக் கருதி அதை வெட்டி அகற்றியிருக்கலாம். எந்த இடையூறுமின்றி, ரோட்டோரத்தில் பயன் அளித்து வந்த மரத்தை வெட்டியது ஏற்க முடியாது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், 'மரம் வெட்டி அகற்ற எந்த அனுமதியும் யாரும் பெறவில்லை. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்' என்றனர்.-------------------வெட்டுவது எளிது... வளர்ப்பது கஷ்டம்!திருப்பூர், காங்கயம் ரோடு, டி.எஸ்.கே மருத்துவமனை எதிரில், 50 ஆண்டுகளாக மக்களுக்கு நிழல் கொடுத்து, பரந்து விரிந்திருந்த பழமையான அரச மரம் வெட்டப்பட்டுள்ளது.பயணிகள் பஸ்சுக்கு காத்திருக்கும் வகையில், நிழல் தரும் விதமாக வளர்ந்து நின்ற பெரிய மரம் ஒன்று சில நாள் முன் வெட்டி அகற்றப்பட்டது. தனியார் ஒருவர் புதிய கட்டடம் கட்டி வருகிறார். அந்த கட்டடத்துக்கு இடையூறு எனக்கருதி அதை வெட்டி அகற்றியிருக்கலாம்
தொடரக்கூடாது
கடுமையான கோடை வெப்பம் அனல் வீசும் காலத்தில், குடிநீருக்கும், காற்றுக்கும் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சுற்றுச் சூழல் பராமரிக்கவும், மழை வளம் பெறவும் அரசு துறைகளும், தன்னார்வலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்காக பாடுபட்டு வருகின்றனர். எந்த இடையூறுமில்லாத வகையில் இருந்த மரத்தை வெட்டி அகற்றுவது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். மரங்களை வெட்டி அகற்றுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.