உடுமலை:பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தென்னையை சூறையாடி வரும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தி, சாகுபடியை அழிவிலிருந்து மீட்க 'ட்ரோன்' வாயிலாக மருந்து தெளித்தல் மற்றும் மானியத்தில் மருந்து வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. பல லட்சம் தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக இப்பகுதியில், பராமரிக்கப்பட்டு வருகிறது. இரு வட்டாரங்களில், விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இச்சாகுபடியில், இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாகியுள்ளது. கருகும் மரங்கள்
பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தென்னை மரங்களில், வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதல்கள் அடுத்தடுத்து பரவி, மரங்களை நிலைகுலையச்செய்துள்ளது.போதிய மழை இல்லாமல், வறட்சியும் துவங்கியுள்ளதால், செழித்து காணப்பட்ட தென்னந்தோப்புகள் அனைத்தும், பசுமையிழந்து பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில், துவங்கிய கேரள வாடல் நோயால், அப்பகுதியில், பல லட்சம் மரங்களை விவசாயிகள் வெட்டி அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது, குடிமங்கலம், உடுமலை வட்டாரங்களிலும், தென்னை மரங்களில், சில வகை வாடல் நோய்கள் துவங்கி பரவி வருகிறது. இதற்கான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தெரியாமல், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'கேரள வாடல் நோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து, தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.உடுமலை வட்டாரத்தில், கேரள வாடல் நோய்த்தாக்குதல் கண்டறியப்படவில்லை. பிற வாடல் நோய்களுக்கான அறிகுறிகள் இருந்தால், விவசாயிகள், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். அவர்களுக்கு நோய்த்தடுப்புக்கான பரிந்துரைகள் வழங்கப்படும்,' என்றனர்.விவசாயிகள் கூறியதாவது: தென்னந்தோப்புகளில், 10 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த மரங்களில், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் சவாலாக உள்ளது.மேலும், அடுத்தடுத்து உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து, நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே, நோய்த்தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கின்றனர்.இதற்கு, தமிழக அரசின் ஒத்துழைப்பும், நடவடிக்கையும் அவசியமாகும். தென்னை மரங்களில் பரவி வரும் நோய்களை கட்டுப்படுத்த, தேவையான மருந்துகளை மானியத்தில் வழங்க வேண்டும்.மேலும், அதிக உயரமுள்ள மரங்களில் மருந்து தெளிக்கும் வகையில், 'ட்ரோன்' ஒதுக்கீடு செய்து, வட்டார வாரியாக பயன்படுத்த வேண்டும். இதனால், ஒருங்கிணைந்த முறையில், நோய்க்கட்டுப்பாட்டில் ஈடுபடலாம்.தேவையான மருந்துகளையும், தொழில்நுட்பங்களையும் வழங்கி, அழிவிலிருந்து சாகுபடியை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து வகை நோய்த்தாக்குதலையும் கணக்கிட்டு, பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பல லட்சம் தென்னை மரங்கள் அழிவதுடன் விவசாயிகளும் வாழ்வாதாரம் இழப்பார்கள்.இவ்வாறு, தெரிவித்தனர்.