| ADDED : ஆக 02, 2024 05:16 AM
திருப்பூர் : ''வடக்கு உழவர் சந்தை முன் வியாபாரிகள் கடை விரிப்பதால் உழவர் சந்தை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது'' என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகில் வடக்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தையில், நம்பியூர், அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள 10 ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 302 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். உழவர் சந்தை அதிகாலை 3:30 மணி முதல் காலை 9:00 மணி வரை செயல்படுகிறது. தினசரி 23 டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், உழவர் சந்தையில் இருந்து, நுாறு மீட்டர் துாரத்திற்கு விவசாயிகளை பாதிக்கும் வகையில் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி உழவர் சந்தை செயல்படும் அதிகாலை 3:30 முதல் காலை 9:00 மணி வரை, உழவர் சந்தை முன் ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் பலர் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்பால், 302 உறுப்பினர்களில் தற்போது, 130 பேர் மட்டுமே உழவர் சந்தைக்குக் காய்கறிகளைக் கொண்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந்தால், உழவர் சந்தை மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர். குறைந்த விலைக்கே காய்கறிகள்
''வியாபாரிகள் காய் கறிகளை மொத்த கொள்முதல் செய்வதால், குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். விவசாயிகள் விற்பனை செய்யும் விலைக்கே விற்பனை செய்வதால், காய்கறி வாங்க வரும் பொது மக்கள் வியாபாரிகளிடம் காய்கறி வாங்குகின்றனர்.உழவர் சந்தைக்கு வருவதில்லை'' என்கின்றனர் விவசாயிகள்.