உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடை நகருக்கு திருப்புமுனை : பிராண்டட் நிறுவனங்கள் பேரார்வம்

பின்னலாடை நகருக்கு திருப்புமுனை : பிராண்டட் நிறுவனங்கள் பேரார்வம்

திருப்பூர்:சீனா மற்றும் வங்கதேசத்துக்கு மாற்றாக, இந்தியாவை தேர்வு செய்துள்ள, முன்னணி 'பிராண்டட்' நிறுவனத்தினர், திருப்பூர் தொழிற்சாலைகளில் உற்பத்தி படிநிலைகளை ஆய்வு செய்து, மனநிறைவுடன் ஆர்டர் கொடுக்க தயாராகியுள்ளனர்.உலகளாவிய ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில், 40 முதல் 50 சதவீதபங்களிப்புடன் சீனா முன்னனியில் உள்ளது. சிறிய நாடான வங்கதேசம், இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடுகளை பொறுத்து, இந்தியா அல்லது வியட்நாம் மூன்றாவது இடம் வகிக்கின்றன.நம்மிடம் இருந்து மூலப்பொருட்களை வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்து, ஆடைகளை உற்பத்தி செய்து, ஏற்றுமதி வர்த்தகத்தில் வங்கதேசம் போட்டியாக மாறியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு, சீனாவின் மீதான வர்த்தக உறவை மாற்றியமைக்க, உலக நாடுகள் விரும்புகின்றன.

நமக்கு சாதகம்

'சீனா ஒன் பிளஸ்' என்ற கோட்பாட்டின்படி, இந்தியாவுடனான வர்த்தக உறவை விரும்புகின்றன. சட்டம், ஒழுங்கு அமைதியாக இருப்பதுடன், ஆரோக்கியமான வர்த்தகத்துக்கு நமது நாடு ஏற்றது என்று, வெளிநாட்டினர் விரும்புகின்றனர்.சம்பள உயர்வு கேட்டு, வங்கதேச தொழிலாளர் போராடினர்; சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, அந்நாட்டு அரசு, ஜவுளி ஏற்றுமதிக்கான மானியத்தையும் குறைத்துவிட்டது. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.வங்கதேசத்துக்கு சென்று கொண்டிருந்த ஆர்டர்களும், நமது நாட்டுக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர் போராட்டம் காரணமாக, பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான வர்த்தகத்தை வளர்த்தெடுக்க, இந்தியாவே சரியான தேர்வு என, வளர்ந்த நாடுகள் நம்மை நாடி வருவது அதிகரித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிர மணியன் கூறுகையில், ''சீனா மற்றும் வங்கதேசத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, முன்னணி வர்த்தக நிறுவனங்கள், 'பிராண்டட்' நிறுவனங்கள், இந்தியாவின் பக்கமாக திரும்பியுள்ளன.திருப்பூருக்கு நேரில் வந்து பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பம், மறுசுழற்சி தொழில்நுட்பம் ஆடை உற்பத்தியில் பயன்படுத்துவதை வர்த்தக நிறுவனத்தினர் கண்ணுறுகின்றனர். மனநிறைவுடன் ஆர்டர் கொடுக்க தயாராகிவிட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தி எதிர்பார்ப்பை, திருப்பூர் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.ஆதாரப்பூர்வமாக, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில் முன்னோடியாக இருப்பதால், திருப்பூரை தேர்வு செய்துள்ளனர்,'' என்றார்.இந்திய நிறுவனங்களைதேடி வரும் முன்னணி நிறுவனங்கள்கடந்த நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக சரிந்தது. புதிய வர்த்தக வாய்ப்புகள் நம்மை தேடி வந்ததால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி வளர்ச்சி பெற்றுள்ளது.குறிப்பாக, 'ப்ரிமார்க்', 'டெஸ்கோ', 'ஜார்ஜ்' மற்றும் 'டெகாத்லான்' போன்ற, முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்கள், இந்திய ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களை தேடி வந்து ஆர்டர் கொடுக்க விரும்புகின்றன.அமெரிக்காவை சேர்ந்த, ஜி.ஏ.பி., 'கார்ட்டர்ஸ்' மற்றும் 'வால்மார்ட்' போன்ற 'பிராண்ட்'களும், இந்திய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்புகின்றன. ஐரோப்பியாவை சேர்ந்த 'நெக்ஸ்ட்', 'டன்ஸ்' போன்ற நிறுவனங்களும், ஆஸ்திரேலியாவின் ''டார்க்கெட்' 'வூல்வொர்த்ஸ்' போன்ற நிறுவனங்களும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Selvam M
ஜூலை 24, 2024 13:52

Karur textiles work very bad


Navamani Lakshmanan
ஜூலை 23, 2024 22:55

திருப்பூர் மீண்டும் பழைய நிலைக்கு வர வாழ்த்துக்கள். வாழ்க இந்தியா வளர்க திருப்பூர்


Ms Mahadevan Mahadevan
ஜூலை 23, 2024 06:26

திருப்பூர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்


Jaffer Jaffer
ஜூலை 23, 2024 05:25

நாங்கள் திருப்பூர்காரன் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி உள்ளது


சமீபத்திய செய்தி