| ADDED : ஜூன் 30, 2024 10:58 PM
உடுமலை:பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ள பகுதியில், பராமரிப்பில்லாத ஆற்று படித்துறையை சீரமைக்க ஹிந்து அறநிலையத்துறை, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற பழங்கால கோவில்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக, கொழுமத்தில் மிக பழமை வாய்ந்த தாண்டேஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.தென் சிதம்பரம் என பக்தர்களால் அழைக்கப்படும், இக்கோவில் அருகிலேயே கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலும் உள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதியிலுள்ள கோவில்களுக்கு, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், அங்குள்ள அமராவதி ஆற்றங்கரைக்கு சென்று விட்டு, கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்காக அமராவதி ஆற்றின் கரையில், பழங்காலத்தில் பெரிய கற்களை கொண்டு அழகாக அடுக்கிய கட்டமைப்புடன் கூடிய படித்துறை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இதை அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல், இந்த படித்துறை சிதிலமடைய துவங்கியது.மழைக்காலத்தில் வெள்ள நீர் ஓடி, மண் அரிப்பு ஏற்பட்டு, படித்துறை கட்டமைப்பு காணாமல் போக துவங்கியது. தற்போது படித்துறை வழியாக செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.மேலும், மதுபாட்டில்களை உடைத்து அப்பகுதி முழுவதும் வீசியுள்ளனர். படித்துறை பகுதியில், ஆறு முழுவதும் ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளது.பக்தர்கள் கூறியதாவது: தொன்மை வாய்ந்த பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.குறிப்பாக, அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழித்தடத்தை சீரமைத்து, படித்துறையை புதுப்பிக்க ஹிந்து அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.