| ADDED : ஜூன் 13, 2024 02:11 AM
திருப்பூர்:பழுதடைந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சரி செய்வதற்காக பெங்களூரு 'பெல்' நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 19ல் நடந்தது. ஓட்டுப்பதிவுக்கு, கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் ஓட்டுப் பதிவு விவரத்தை துண்டுச்சீட்டில் வாக்காளருக்கு தெரிவிக்கும் வி.வி.பேட் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தேவையைவிட 20 சதவீதம் கூடுதல் எண்ணிக்கையில் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர் இறுதி பட்டியலுக்குப்பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'பெல்' இன்ஜினியர் குழுவினர் பரிசோதித்தனர்.பழுதடைந்த இயந்திரங்கள் அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கான ஸ்ட்ராங் ரூம்களில் தனியே வைக்கப்பட்டன.தகுதியான இயந்திரங்களில், பேலட் ஷீட் பொருத்தப்பட்டு, ஓட்டுப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:லோக்சபா தேர்தல் முடிவடைந்ததால் பழுதடைந்த இயந்திரங்கள், பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி சரி செய்யப்பட உள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக பழுதடைந்த நிலையில் உள்ள கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வி.வி.பேட் எண்ணிக்கை கணக்கெடுப்பு மற்றும் விவர பட்டியல் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட தேர்தல் பிரிவினரும் அப்பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர்.ஓட்டுப்பதிவின்போது மக்கர் செய்த இயந்திரங்களில், ஓட்டுப்பதிவு விவரங்கள் இருக்கும்; அவ்விவரங்களை 45 நாட்களுக்கு பாதுகாப்பது கட்டாயம்.கால அவகாசம் முடிவடைந்ததும் இந்த இயந்திரங்களும் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.