| ADDED : மே 23, 2024 11:24 PM
உடுமலை;செஞ்சேரிமலை ரோட்டில், நான்கு வழிச்சாலை பாலம் அருகே, செங்குத்தான பள்ளத்தால், தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது; உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.உடுமலையில் இருந்து ஏரிப்பாளையம், பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் ரோட்டில், அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோட்டில், ஏரிப்பாளையம் தாண்டியதும், நான்கு வழிச்சாலை குறுக்கிடுகிறது.அங்கு உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு, இரு புறங்களிலும் அணுகுசாலை ஏற்படுத்தப்பட்டது. இப்பணிகளால், பாலத்தின் மறுபுறத்தில், செஞ்சேரிமலை ரோடு, பள்ளமாக மாறி விட்டது.பாலம் பகுதியில் இருந்து செங்குத்தாக கீழிறங்கி, செஞ்சேரிமலை ரோட்டில் செல்ல வேண்டும். இதனால், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல திணறி வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால், செங்குத்தான பகுதியில், சிறிய கால்வாய் போல மண் அரிக்கப்பட்டுள்ளது.உடுமலையில் இருந்து செல்லும் வாகனங்கள் கீழிறங்கும் போது, மண் அரிக்கப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனங்கள் சிக்கி கொண்டு விபத்து ஏற்படுகிறது; பலர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். மழை பெய்யும் போது, அவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாது.உயர் மட்ட பாலம் கட்டும் போதே இப்பிரச்னை குறித்து மக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக அவ்விடத்தில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால், நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும்.