வேலை கிடைக்கவில்லையே என மனம் நொறுங்கிப்போகாமல், சொந்தகாலில் நிற்கலாம் என்ற திருநங்கைகளின் இடைவிடாத முயற்சி, இன்று பாரம்பரிய இனிப்பு பதார்த்தங்களை மீண்டும் நம்மிடையே கொண்டு வந்து சேர்த்துள்ளது.நெருப்பெரிச்சலில் வசிக்கும் திருநங்கைகள் 10 பேர் மற்றும் இரண்டு பெண்கள் இணைந்து, மகராசி ஸ்வீட்ஸ் என்ற பெயரில், பாரம்பரிய இனிப்பு பதார்த்தம் தயாரித்து விற்கும் தொழிலை துவக்கினர். துவக்கத்தில், வீட்டிலயே தயாரித்து முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவற்றை விற்பனை செய்து வந்தனர்.வரவேற்பு கிடைத்ததால், சிறுதானிய உணவு தயாரிப்பில் களமிறங்கி, வாரசந்தைகள், வெளிமாவட்ட விழாக்கள், கண்காட்சி களில் ஸ்டால் அமைத்து, தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய இனிப்பு பதார்த்தங்களை இன்று மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளனர்.இமைகள் அறக்கட்டளை உதவியுடன், நபார்டு வழங்கி வழிகாட்டுதலுடன், பயிற்சி பெற்றுள்ளனர். அதற்கு பிறகு, வங்கி உதவியுடன், மகராசி ஸ்வீட்ஸ் என்ற பெயரில், பாரம்பரிய இனிப்பு பதார்த்தம் தயாரித்து விற்கும் பணியில் மும்முராக இறங்கியிருக்கின்றனர்.திணை லட்டு, திணை அதிரசம், கறுப்பு எள் லட்டு, முறுக்கு, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு என, பாரம்பரிய சிறுதானியங்களில் இருந்து, விதவிதமான ஸ்வீட் வகைகளை தயாரித்து, கலக்கிக்கொண்டிருக்கிறது இந்த மகராசி ஸ்வீட்ஸ். கடை விற்பனை மட்டுமல்லாது, வீட்டு விேஷசங்களுக்கும், பண்டிகை நாட்களிலும், ஆர்டர் அடிப்படையிலும் இனிப்பு வகைகள் தயாரித்து கொடுக்கின்றனர்.இதுகுறித்து மகராசி ஸ்வீட்ஸ் தலைவி திவ்யா கூறுகையில், ''ஆரம்பத்தில், முறுக்கு, சீடை, அதிரசம் போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்து வைத்து, விற்பனை செய்தோம். கடந்த ஆறு ஆண்டுகளாக, சிறுதானிய இனிப்பு வகைகள், முறுக்கு உள்ளிட்டவை தயாரித்து, வாரச்சந்தை, கண்காட்சி, கோவில் திருவிழாக்களில் கடை அமைத்து, விற்பனை செய்கிறோம். கோவில் திருவிழாக்களில்தான் அதிக அளவு விற்பனை நடக்கிறது.நிரந்தரமாக கடை நடத்த, வாடகைக்கு கடை கிடைக்கவில்லை. சென்னை, துாத்துக்குடி என, பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, கோவில் விழாக்களில் கடை நடத்தி வருகிறோம்.திருநங்கைகள், வேலை வாய்ப்பு இல்லை என்று கவலையுடன் இருக்கக்கூடாது. கூட்டாக இணைந்து, தங்களுக்கு தெரிந்த சிறுதொழில்களில் கால்பதித்து, சமுதாயத்தில் கவுரவமாக வாழ வேண்டும்,'' என்றார்.