உடுமலை:குருமலை மலைவாழ் கிராமத்தில், அரசுப்பள்ளி கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, நீண்ட காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகவே தொடர்கிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அடர் வனத்தில் வசிக்கும் அப்பகுதி மக்கள், அடிப்படை வசதி மற்றும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காக, தொடர்ந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண்டுகொள்ள ஆளில்லை
உடுமலை வனச்சரகம், குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் இரு ஆண்டுகளுக்கு முன், மழைக்கு இடிந்து விழுந்தது.இதே போல், குருமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து, பல ஆண்டுகளாகிறது. இதுவரை கட்டடத்தை புதுப்பிக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, கிராமத்திலுள்ள, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ள வீடுகளிலும், திறந்தவெளியில், மரத்தடியில், அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை, சமவெளியிலுள்ள உண்டு, உறைவிட பள்ளிகளில், சேர்த்துள்ளனர். ஆனால், அப்பள்ளிகளின் சூழலுக்கு பொருந்தாமல், மாணவர்கள் அங்கிருந்து மீண்டும் தங்கள் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகின்றனர்.இப்பிரச்னை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், இதர அரசுத்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறவே, மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, மலை கிராமங்களில், பள்ளிகள் துவக்க அரசு நடவடிக்கை எடுத்தது.ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால், பள்ளி கட்டடங்கள் இடிந்து, அனைத்து பள்ளிகளும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து, தமிழக முதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க தொடர்ந்து மனு அனுப்பி வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.
இதுவும் தேவைங்க!
வனப்பகுதியிலுள்ள, மலை கிராம பள்ளிகளில் பணியாற்ற நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, அங்கு தங்குவதற்கு எவ்வித வசதியும் இல்லை. நாள்தோறும் சமவெளிப்பகுதியில் இருந்து பயணித்து, பள்ளிக்கு செல்வதும் சாத்தியமில்லை.எனவே, பள்ளி கட்டடங்களை புதுப்பிக்கும் போது, ஆசிரியர்களுக்கான தங்கும் அறை, கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.இல்லாவிட்டால், ஆசிரியர்கள், மலை கிராம பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக செல்வது கேள்விக்குறியாகி, கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும்; அப்பகுதி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.