| ADDED : மே 09, 2024 04:35 AM
உடுமலை : சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து, நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உஷாராகுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சென்னையில், பூங்காவில் விளையாடிய ஐந்து வயது சிறுமி சுதக் ஷாவை, வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, தெரு நாய்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:அரசால் தடை செய்யப்பட்ட 'ராட்வைலர்' நாய் கடித்ததால்தான் சிறுமி படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே, இதேபோல், வீடுகளில் வளர்க்கப்படும் ஆபத்தான நாய் இனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்ய, கால்நடை துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மேலும், வீட்டு நாய்களாலேயே இந்த அவல நிலை என்றால், ரோட்டில் திரியும் தெரு நாய்களால் எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதை உணர வேண்டும். சமீபகாலமாக, தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது.இவை, ஆடு, மாடுகள், கோழிகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.உள்ளாட்சி அமைப்புகளிடம், தெரு நாய்கள் கட்டுப்படுத்த தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது.தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசிகளும் முறையாக போடப்படுவதில்லை. எனவே, சிறுமி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அலட்சியமாக கருதாமல், தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.