உடுமலை:அகல ரயில்பாதையில், ரயில்சேவை அதிகரித்து வரும் நிலையில், கொழுமம் ரோட்டில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.உடுமலை நகர எல்லையில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, கொமரலிங்கம், கொழுமம் வழியாக பழநி செல்லும் ரோடு, 18.80 கி.மீ., துாரம் கொண்டது.இந்த ரோட்டில், நகர எல்லையில், அகல ரயில்பாதை குறுக்கிடுகிறது; ஆனால், மேம்பாலம் இல்லை. இந்த ரயில்பாதையில், ரயில் சேவைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும் போது, அப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.உடுமலையில் இருந்து பழநிக்கு செல்ல மாற்றுப்பாதையாக உள்ள கொழுமம் ரோட்டில், போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.எனவே, கொழுமம் ரோடு சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, உடுமலை ஒன்றிய குழு கூட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.