''ஸ்டைலுக்காக புகை விடாதீர்கள்; இன்னொரு நுரையீரல் கிடைக்காது'' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, சிக்கண்ணா கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்ட அலகு - 2, மாணவ, மாணவியர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புகை பிடிப்பதால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. மாணவர் ஒருவர் சிகரெட் பாக்கெட்களை உடையாக அணிந்து, 'புகையிலையை தவிர்ப்போம்; புற்றுநோயை விரட்டுவோம்' என்ற தலைப்பிட்டு, பதாகையை தலையில் அணிந்திருந்தார்.ஒரு மாணவர், வழக்கமாக இதயம், நுரையீரல் செயல்பாடுகள், புகை பிடித்த பின், பழக்கம் தொடரும் போது, இதயம், நுரையீரல் செயல்பாடுகள் எவ்வாறு மாறுகிறது என்பது குறித்து காட்சிப்படுத்தி, அதை ஆடையாக அணிந்து வந்திருந்தார்.விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பங்கேற்ற கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசுகையில், 'உங்கள் வீட்டுக்கு அருகில், நீங்கள் பயணிக்கும் இடங்களில் யாரேனும் புகைபிடித்தால் அவர்களிடம் சென்று, புகை பிடிப்பதால், நீங்கள் மட்டுமின்றி உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் சிரமம் தான்; புகைபிடிப்பதை இன்று முதல் விடுங்கள் என எடுத்துக்கூறுங்கள்.பாதிப்புக்கு உள்ளாகும் ஒவ்வொருவருக்கும் மாற்று நுரையீரல் கிடைக்க வாய்ப்பில்லை. பலரும் ஸ்டைலுக்காக மூக்கு, காது, வாய் வழியாக புகை விட்டு, சிகரெட்டை ரசித்து புகைக்கின்றனர். அது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக தின்று வருகிறது என்பதை பின்னரே உணர்வர்.புற்றுநோயை இப்பூவுலகில் இருந்து அகற்ற வேண்டும். ஒவ்வொருவரும் மாறினால் தான், புற்றுநோயை தடுக்க முடியும்; புகையிலை இல்லாத சமுதாயம் உருவாக்க முடியும்'' என்றனர்.