பல்லடம் : பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், அத்துமீறிய இளைஞர்கள், போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 219வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.நேற்று கட்சியினர், அமைப்பினர் பலர், பல்லடம் வழியாக கார்கள், டூவீலர்களில் சென்றனர். அவர்களில், சில இளைஞர்கள் கார்களின் மீது ஏரி அமர்ந்தும், பைக்கில் நின்றபடியும் வந்தனர்.வாகனங்களில் பதிவு எண் தெரியாத வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டிக் கொண்டும், ஹெல்மெட் சீட் பெல்ட் அணியாமலும் அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்தனர். செட்டிபாளையம் பிரிவில், திடீரென வாகனங்களை நிறுத்தி, பட்டாசு வெடித்தபடி நடனமாடினர்.அதன்பின், பஸ் ஸ்டாண்டுக்குள் எதிர் திசையில் சென்று, பஸ்களை வழி மறித்தபடி கொடிகளுடன் நடனம் ஆடினர். அங்கிருந்து நால்ரோடு சிக்னல் சென்ற இளைஞர்கள், சிக்னலை மதிக்காமல், நால்ரோட்டின் மையப் பகுதியில் நின்றபடி நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இளைஞர்களை அகற்ற முயன்றனர். இருப்பினும், இளைஞர்கள் செல்லாததால், இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, ''எதற்காக நெடுஞ்சாலையை வழிமறித்து இப்படி செய்கிறீர்கள். முதலில் கிளம்புங்கய்யா,'' என்று கூற, ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், 'எதற்கு வாய்யா போய்யா என்று கூறுகிறீர்கள்? என்னய்யா, செய்ய முடியும் உங்களால்? மரியாதையாக பேசிப் பழகுங்கள்,' என, எச்சரிக்கை விடுத்தனர்.போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி.,விஜிகுமார் சமாதானப்படுத்தி இளைஞர்களை அனுப்பி வைத்தார்.