| ADDED : ஜன 26, 2024 01:21 AM
திருப்பூர்:திருப்பூர் மங்கலம் ரோடு, மாகாளியம்மன் கோவில் பகுதியில் 'ஈகிள் சக்தி சிட்ஸ்' என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனத்தை கார்த்திக், அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நடத்தி வந்தனர். 30 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பல்வேறு குரூப்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.இந்நிறுவனத்தில், சரவணன் என்பவர், மேலாளராகவும், பணம் வசூலிப்பாளராக சசிக்குமார் என்பவர் இருந்தனர்.சீட்டு நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலரும் அன்றாடம், வாரம், மாதம் என பல்வேறு வகையில் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். சீட்டு முதிர்வு ஏற்பட்டும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் நடத்தி வந்தனர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்ட பணத்தை கொடுக்காமல் தலைமறைவானதாக திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். கார்த்திக், 40, சரவணன், 45 மற்றும் சசிக்குமார், 31 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.